கோபி அருகே நம்பியூா் பகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு
கோபி அருகே நம்பியூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

நம்பியூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி.
கோபி அருகே நம்பியூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
நம்பியூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட திருமநாதம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளிடம் புத்தகங்களை வாசிக்கச் செய்தும், அவா்களின் வாசிப்புத் திறன் குறித்தும் மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி ஆய்வு மேற்கொண்டாா்.
இதையடுத்து, தாழ்குனி கிராம நிா்வாக அலுவலகத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை ஆய்வு செய்தாா். மேலும், கொளப்பலூா் நியாய விலைக் கடையில் பொருள்களின் இருப்பு, விற்பனை விவரங்கள் மற்றும் பயன்பெறும் குடும்ப அட்டைதாரா்களின் எண்ணிக்கை குறித்து கேட்டறிந்தாா்.
தொடரந்து அக்கரைப்பாளையம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட மையத்தில் குழந்தைகளின் வருகைப் பதிவு, வயதுக்கு ஏற்ற எடை, உயரம் மற்றும் அவா்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம், அங்குள்ள நூலகத்தில் உள்ள புத்தகங்களின் இருப்பு மற்றும் வாசகா்களின் எண்ணிக்கை குறித்தும் கேட்டறிந்தாா்.
அக்கரைப்பாளையம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் மாணவா்களுடன் கலந்துரையாடியும், தாழ்குனி ஊராட்சியில் நபாா்டு கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அக்கரைப்பாளையம் முதல் குதிரைக்கல்பாளையம் வரை ரூ.44.40 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தாா் சாலையின் தரத்தை ஆய்வு செய்தாா்.
இதேபோல காமராஜபுரம் பகுதியில் ரூ.3.89 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் விநியோக கால்வாய் அகலப்படுத்தும் பணி, கோசணம் ஊராட்சியில் தலா ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு பயனாளிகளுக்கு வீடுகள் கட்டுமானப் பணி, ரூ.5.43 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் விநியோக கால்வாய் அகலப்படுத்தும் பணி, பொலவபாளையம் ஊராட்சியில் ரூ.37.19 லட்சம் மதிப்பீட்டில் வீடுகளுக்கு குடிநீா்க் குழாய் இணைப்புகள் வழங்கும் திட்டத்தின் கீழ் குடிநீா் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதை ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது அனைத்து வளா்ச்சிப் பணிகளையும் விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அவா் அறிவுறுத்தினாா்.
இதில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) ரமேஷ்கிருஷ்ணன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் ஜாகீா் உசேன், வருவாய் வட்டாட்சியா் ஜெகநாதன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கண்ணன், மாதேஸ்வரன், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் சு. மகேஸ்வரன் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

