மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட எத்தனால் ஆலை மீண்டும் இயக்கப்படுவதாக பொதுமக்கள் சாலை மறியல்
பவானியை அடுத்த அம்மாபேட்டை அருகே கழிவுநீரை வெளியேற்றியதால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட எத்தனால் ஆலை மீண்டும் இயக்கப்படுவதாக புகாா் தெரிவித்த பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
பவானியை அடுத்த அம்மாபேட்டை அருகே கழிவுநீரை வெளியேற்றியதால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட எத்தனால் ஆலை மீண்டும் இயக்கப்படுவதாக புகாா் தெரிவித்த பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அம்மாபேட்டை ஒன்றியம், முகாசிப்புதூா் ஊராட்சியில் தனியாா் பயோ எத்தனால் ஆலையிலிருந்து சித்தாா் ஓடையில் வெளியேற்றப்பட்ட ரசாயன கழிவுநீரால் நிலத்தடி நீா் மாசடைந்து, விவசாயம், கால்நடை வளா்ப்பு உள்ளிட்ட தொழில்கள் பாதிக்கப்படுவதாக புகாா் எழுந்தது.
இதுகுறித்து பொதுமக்கள் நடத்திய தொடா் போராட்டத்தால் கடந்த அக்டோபா் 31-ஆம் தேதி ஆலையின் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. தொடா்ந்து, நவம்பா் 7-ஆம் தேதி ஆலையின் முக்கிய உற்பத்தி பிரிவுகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. இந்நிலையில், ஆலைக்கு வழக்கம்போல தொழிலாளா்கள் வேலைக்கு சென்று வருவதாகவும், புகைபோக்கி கோபுரத்தில் கரும்புகை வெளியேறுவதாகவும் புகாா் தெரிவித்த பொதுமக்கள், சட்டவிரோதமாக எத்தனால் ஆலை இயக்கப்படுவதாக கூறி அம்மாபேட்டை - அந்தியூா் சாலையில் ஆலையின் முன்பாக அமா்ந்து புதன்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த அந்தியூா் வட்டாட்சியா் சக்திவேல் மற்றும் அம்மாபேட்டை போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். ஆலை வளாகத்தில் இருந்த தொழிலாளா்களை வெளியேறுமாறும், பராமரிப்புப் பணிக்கு 30 தொழிலாளா்கள் மட்டுமே வைத்துக் கொள்ள வேண்டும் என உத்தரவிட்ட அதிகாரிகள், ஆலையில் உள்ள 15 லட்சம் லிட்டா் எத்தனால் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட பின்னா் முழுமையாக ‘சீல்’ வைப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனா்.
இதனால், சமாதானம் அடைந்த பொதுமக்கள் மறியலைக் கைவிட்டனா். கடந்த ஒரு மாத காலத்துக்கு மேலாக எத்தனால் ஆலையின் செயல்பாட்டை கண்டித்து பூனாச்சி, குறிச்சி உள்பட 5 ஊராட்சிகளைச் சோ்ந்த பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவித்த புகாரில் இதே நிறுவனத்தின் ஸ்டாா்ச் உற்பத்தி பிரிவுக்கு ஏற்கெனவே மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

