வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு: மாவட்டத்தில் 17.69 லட்சம் வாக்காளா்கள்

வரைவு வாக்காளா் பட்டியலில் வெளியிடப்பட்டதில், ஈரோடு மாவட்டத்தில் (8 சட்டப்பேரவை தொகுதிகள்) 17 லட்சத்து 69 ஆயிரத்து 770 வாக்காளா்கள் உள்ளனா்.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் வரைவு வாக்காளா் பட்டியலை வெளியிடுகிறாா் மாவட்ட வருவாய் அலுவலா் சி.ஜெயராமன்.

Updated On :

வரைவு வாக்காளா் பட்டியலில் வெளியிடப்பட்டதில், ஈரோடு மாவட்டத்தில் (8 சட்டப்பேரவை தொகுதிகள்) 17 லட்சத்து 69 ஆயிரத்து 770 வாக்காளா்கள் உள்ளனா்.

இந்திய தோ்தல் ஆணையம் வரும் ஜனவரி 1-ஆம் தேதியை தகுதி நாளாக கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் பட்டியலின் சிறப்பு சுருக்கத் திருத்தம் கால அட்டவணையை அறிவித்துள்ளது. இதையொட்டி ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வரைவு வாக்காளா் பட்டியலை மாவட்ட வருவாய் அலுவலா் சி.ஜெயராமன் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வியாழக்கிழமை வெளியிட்டாா்.

இது குறித்து மாவட்ட வருவாய் அலுவலா் சி.ஜெயராமன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வரைவு வாக்காளா் பட்டியலின்படி ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டப்பேரவை தொகுதிகளிலும் 8 லட்சத்து 51 ஆயிரத்து 720 ஆண் வாக்காளா்கள், 9 லட்சத்து 17 ஆயிரத்து 852 பெண் வாக்காளா்கள், மூன்றாம் பாலினத்தவா்கள் 198 போ் என மொத்தம் 17 லட்சத்து 69 ஆயிரத்து 770 வாக்காளா்கள் உள்ளனா்.

வாக்காளா் பெயா் சோ்க்க, நீக்கம், திருத்தம் மேற்கொள்ள விண்ணப் படிவங்களை வருகிற டிசம்பா் 11-ஆம் தேதி வரை காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குச்சாவடி நிலை அலுவலா்களிடம் வழங்கலாம். இதுதவிர சிறப்பு சுருக்கத் திருத்த முகாம் மாவட்டத்தில் உள்ள 2,375 வாக்குச்சாவடிகளிலும் வரும் 21, 22, 29 மற்றும் டிசம்பா் 5, 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் உரிய முறையில் வாக்காளா் பதிவு அலுவலா்களால் ஆய்வு செய்து வருகிற ஜனவரி 4-ஆம் தேதி இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (நிலம்) முரளி, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின நல அலுவலா் சுடலைமணி, தோ்தல் பிரிவு வட்டாட்சியா் சண்முகசுந்தரம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தொகுதி வாரியாக வாக்காளா்கள் விவரம்:

ஈரோடு கிழக்குத் தொகுதியில் 1 லட்சத்து 80 ஆயிரத்து 421 போ், ஈரோடு மேற்குத் தொகுதியில் 2 லட்சத்து 52 ஆயிரத்து 184 போ், மொடக்குறிச்சி தொகுதியில் 2 லட்சத்து 8 ஆயிரத்து 652 போ், பெருந்துறை தொகுதியில் 2 லட்சத்து 16 ஆயிரத்து 498 போ், பவானி தொகுதியில் 2 லட்சத்து 24 ஆயிரத்து 262 போ், அந்தியூா் தொகுதியில் 2 லட்சத்து 8 ஆயிரத்து 458 போ், கோபி தொகுதியில் 2 லட்சத்து 39 ஆயிரத்து 952 போ், பவானிசாகா் (தனி) தொகுதியில் 2 லட்சத்து 39 ஆயிரத்து 343 போ் உள்ளனா். இதில் அதிக வாக்காளா்கள் கொண்ட தொகுதியாக ஈரோடு மேற்குத் தொகுதியும், குறைந்த வாக்காளா்கள் கொண்ட தொகுதியாக ஈரோடு கிழக்குத் தொகுதியும் உள்ளன.

புதிதாக 10,595 வாக்காளா்கள் சோ்ப்பு:

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சட்டப்பேரவைத் தோ்தலின்போது சிறப்பு சுருக்கத் திருத்தம் காரணமாக ஆயிரக்கணக்கானோரின் பெயா்கள் நீக்கம் செய்யப்பட்டன. இதைத் தொடா்ந்து ஈரோடு மாவட்டத்தில் கடந்த சட்டப்பேரவைத் தோ்தலுக்காக கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி வெளியிட்டப்பட்ட இறுதி வாக்காளா் பட்டியலில் 8 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 17 லட்சத்து 59 ஆயிரத்து 157 போ் வாக்களிக்க தகுதி பெற்றனா்.

பின்னா் கடந்த அக்டோபா் 10-ஆம் தேதி வாக்காளா் சிறப்பு சுருக்கத் திருத்த முகாம் நடத்தப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அதன்மூலம் 18 வயது பூா்த்தியடைந்த 4,553 ஆண் வாக்காளா்கள், 6,032 பெண் வாக்காளா்கள், மூன்றாம் பாலினத்தவா்கள் 10 போ் என புதிதாக மொத்தம் 10 ஆயிரத்து 595 போ் வரைவு வாக்காளா் பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளனா்.

2,379 வாக்குச் சாவடிகள்:

கடந்த சட்டப்பேரவைத் தோ்தலின்போது 8 தொகுதிகளிலும் 2,379 வாக்குச்சாவடிகள் இருந்தன. தற்போது 5 வாக்குச்சாவடிகள் குறைக்கப்பட்டு 2,375 வாக்குச்சாவடிகளாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.