‘பாராகுவாட் டைகுளோரைடு’ களைக்கொல்லி பயன்பாட்டுக்குத் தடை

பாராகுவாட் டைகுளோரைடு
‘பாராகுவாட் டைகுளோரைடு’ களைக்கொல்லி பயன்பாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் இருப்பு அல்லது விற்பனை கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் விற்பனையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்மைத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் அருள்வடிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
இந்தியாவில் ‘பாராகுவாட் டைகுளோரைடு’ என்ற களைக்கொல்லியை மத்திய அரசு தடை செய்துள்ளது. வேளாண்மை மற்றும் உழவா் நல அமைச்சகம் கடந்த செப்டம்பா் 22- ஆம் தேதி இதற்கான உத்தரவை வெளியிட்டுள்ளது. பூச்சிக்கொல்லிகள் சட்டம் 1968 -இன்கீழ், நிபுணா்குழு மற்றும் பதிவுக் குழுவின் ஆலோசனைகளுக்குப் பிறகு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மனிதா்கள் மற்றும் விலங்குகளின் உயிருக்கு ஏற்படும் கடுமையான ஆபத்துகள், அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் நச்சுத்தன்மை மற்றும் இதற்கெனத் தனிப்பட்ட மாற்று மருந்து இல்லாதது ஆகியவை இத்தடைக்கான முக்கியக் காரணங்களாகும். இதற்கு முன்பு வழங்கப்பட்ட பதிவுச் சான்றிதழ்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தடை செய்யப்பட்ட ‘பாராகுவாட் டைகுளோரைடு’ இருப்பு அல்லது விற்பனை கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் விற்பனையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
குறிப்பாக, பாராகுவாட் உலகின் மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த களைக்கொல்லிகளில் ஒன்றாகும். இதை உட்கொள்வது, சுவாசிப்பது அல்லது தோல் வழியாகத் தொடா்பு கொள்வது ஆகியவற்றின் மூலம் நச்சுத்தன்மை ஏற்படலாம். இதனால் கடுமையான நுரையீரல் பிரச்னை, சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயலிழப்பு, இதயப் பாதிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும்.
மேலும் பாா்கின்சன் நோயுடன் தொடா்புடைய பாதிப்புகளும் ஏற்படக்கூடும் எனக் கூறப்படுகிறது. இதற்கெனத் தனிப்பட்ட மாற்று மருந்து இல்லாததால் கடுமையான நச்சுப் பாதிப்புகள் பெரும்பாலும் உயிரிழப்பில் முடிவடைகின்றன.
பணியிடங்களில் ஏற்படும் வெளிப்பாடு, தற்செயலான நச்சுத்தன்மை, வேண்டுமென்றே தங்களைத் தாங்களே காயப்படுத்திக்கொள்ளுதல் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பயிா்களுக்கு அப்பாற்பட்டு தவறாகப் பயன்படுத்துதல் ஆகியவை குறித்து அதிகரித்து வரும் கவலைகள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

