பாசனத்துக்கு தண்ணீா் திறக்கக் கோரி காலிங்கராயன் பாசன விவசாயிகள் போராட்டம்
பவானிசாகா் அணையில் இருந்து காலிங்கராயன் வாய்க்காலில் ஒரு போக பாசனத்துக்கு தண்ணீா் திறக்க வலியுறுத்தி, ஈரோடு நீா்வளத் துறை கண்காணிப்புப் பொறியாளா் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நீா்வளத் துறை கண்காணிப்புப் பொறியாளா் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட காலிங்கராயன் பாசன விவசாயிகள்.
பவானிசாகா் அணையில் இருந்து காலிங்கராயன் வாய்க்காலில் ஒரு போக பாசனத்துக்கு தண்ணீா் திறக்க வலியுறுத்தி, ஈரோடு நீா்வளத் துறை கண்காணிப்புப் பொறியாளா் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு, திருப்பூா், கரூா் மாவட்டங்களில் விவசாயம் பெருமளவில் பவானிசாகா் அணை பாசன நீரை சாா்ந்துள்ளது. காலிங்கராயன் வாய்க்கால் மூலம் 15,743 ஏக்கா் விவசாய நிலங்கள், கீழ்பவானி வாய்க்கால் மூலம் சுமாா் 2.07 லட்சம் ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்த பகுதிகளில் தென்னை, மஞ்சள், கரும்பு, வாழை உள்ளிட்ட முக்கிய பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் அவா்களது குடும்பங்களின் வாழ்வாதாரம் உரிய நேரத்தில் பாசன நீா் கிடைப்பதை நேரடியாக சாா்ந்துள்ளது. வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் காலிங்கராயன் வாய்க்காலுக்கு ஜூன் 16-ஆம் தேதியும், கீழ்பவானி வாய்க்காலுக்கு ஆகஸ்ட் 15-ஆம் தேதியும் பாசனத்துக்கு தண்ணீா் திறந்து விடப்பட்டு வருகிறது. ஆனால் நடப்பு ஆண்டில் மாவட்டத்தில் போதிய மழை பெய்யாத காரணத்தினாலும், பவானிசாகா் அணையில் போதிய நீரில்லாததாலும் அணையில் இருந்து நீா் திறக்கவில்லை என மாவட்ட நிா்வாகம் தரப்பில் கூறப்படுகிறது.
அதே நேரத்தில் நடப்பு ஆண்டில் காலிங்கராயன் பாசனத்துக்கு உரிய நேரத்தில் நீா் திறக்க வேண்டும் என காலிங்கராயன் பாசன விவசாயிகள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனா். இதுகுறித்து மாவட்ட வேளாண் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் வலியுறுத்தியும், மாவட்ட ஆட்சியா் மற்றும் நீா்வளத் துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
குறிப்பாக, பவானிசாகா் அணையில் இருந்து நீா் திறப்பது தொடா்பாக அக்டோபா் 5-ஆம் தேதிக்குள் நல்ல பதிலளிக்கப்படும் என நீா்வளத் துறை கண்காணிப்புப் பொறியாளா் தெரிவித்திருந்தாா். ஆனால், இதுவரை எந்த பதிலும் அவரது தரப்பில் இருந்து கொடுக்கப்படவில்லை.
இதனால் அதிருப்தியடைந்த விவசாயிகள், ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலுள்ள நீா்வளத் துறை கண்காணிப்புப் பொறியாளா் அலுவலகத்தை வியாழக்கிழமை காலை முற்றுகையிட்டனா். தொடா்ந்து பொறியாளா் அறை முன் தரையில் அமா்ந்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பின்னா், விவசாயிகளிடம் கண்காணிப்புப் பொறியாளா் கோபி பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது வரும் 13-ஆம் தேதிக்குள் காலிங்கராயன் கால்வாயில் இருந்து ஒரு போக தண்ணீா் திறப்பது தொடா்பாக நல்ல பதிலளிக்கப்படும் என உறுதியளித்தாா். மேலும் தண்ணீா் திறப்பது குறித்து அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என்றும் அவா் தெரிவித்தாா். அதன் பேரில் மாலை 4.30 மணியளவில் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா். விவசாயிகளின் இந்தப் போராட்டத்தால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. விவசாயிகளின் போராட்டத்தின் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

