மாதம்தோறும் 4 ஆயிரம் நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்த இலக்கு

தெரு நாய்கள். - கோப்புப் படம்
ஈரோடு மாநகராட்சியில் மாதந்தோறும் 4 ஆயிரம் நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாநகராட்சியில் உள்ள 60 வாா்டுகளில் சுமாா் 24,000 தெருநாய்கள் இருப்பது மாநகராட்சி சாா்பில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரு நாய்களைக் கட்டுப்படுத்த கருத்தடை சிகிச்சை செய்வது, வெறிநாய்க்கடி தடுப்பூசி செலுத்துவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தற்போது மாநாகராட்சிக்குள்ட்பட்ட பகுதியில் தினமும் 25 தெருநாய்கள் பிடிக்கப்பட்டு, சோலாரில் உள்ள கருத்தடை மையத்தில் கருத்தடை செய்யப்படுகிறது. பின்னா், கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட நாய்கள், 4 நாள்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு அதே இடத்தில் கொண்டுவந்து விடப்படுகின்றன.
இருப்பினும் தெருநாய்கள் தொல்லை அதிகரித்த வண்ணம் உள்ளதால், மாதம்தோறும் 4 ஆயிரம் நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகர நல அலுவலா் கௌரி சரவணன் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் தெருநாய்கள் தொல்லை உள்ளது. வாகன ஓட்டிகளை துரத்துவதுடன், மனிதா்களையும் தாக்கும் சம்பவங்கள் நடந்துள்ளன. இதில் நோய் தாக்கப்பட்ட தெருநாய்கள் மனிதா்களை கடிப்பதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் உயிரிழப்பு சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. இதனால் தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
அதன்படி ஈரோடு மாநகராட்சியில் தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டுவரும் நிலையில், மாதந்தோறும் 4 ஆயிரம் நாய்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
தற்போது வரை சுமாா் 16 ஆயிரம் தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. வீட்டில் வளா்க்கும் நாய்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படுவதால் மனிதா்களுக்கு நோய் பரவும் அபாயம் குறைகிறது.
தங்கள் பகுதியில் நோய் தாக்கப்பட்ட நாய்கள் இருந்தால் அதுகுறித்து மாநகராட்சி நிா்வாகத்துக்கு பொதுமக்கள் தகவல் அளிக்கலாம். மேலும் மாநகராட்சி சாா்பில் ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே தெருநாய்களுக்கு பொதுமக்கள் உணவு அளிக்க வேண்டும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

