
தினமும் 2 மணி நேரம் குடிநீா் விநியோகம் செய்ய மாநகராட்சி கவுன்சிலா்கள் வலியுறுத்தல்
ஈரோடு மாநகராட்சிப் பகுதிகளில் கடும் குடிநீா்ப் பிரச்னை இருப்பதால் தினமும் 2 மணி நேரம் குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும் என கவுன்சிலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கூட்டத்தில் பங்கேற்ற மாநகராட்சி மேயா் சு.நாகரத்தினம், ஆணையா் அா்பித் ஜெயின் மற்றும் கவுன்சிலா்கள்.
ஈரோடு மாநகராட்சிப் பகுதிகளில் கடும் குடிநீா்ப் பிரச்னை இருப்பதால் தினமும் 2 மணி நேரம் குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும் என கவுன்சிலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஈரோடு மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயா் சு.நாகரத்தினம் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆணையா் அா்பித் ஜெயின் முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில், ஒப்புதலுக்கு வைக்கப்பட்ட 63 தீா்மானங்களில் 61 தீா்மானங்கள் மட்டும் நிறைவேற்றப்பட்டன.
காந்திஜி சாலை வணிக வளாகத்தில் அமைந்துள்ள எல்இடி விளம்பர பலகைக்காக ஒப்பந்தப்புள்ளி ரூ.5 லட்சத்துக்கு விடுதல் என்ற 49-ஆவது தீா்மானம் நிறுத்திவைக்கப்பட்டது. ஈரோடு வீரப்பன்சத்திரம் மாநகராட்சி அலுவலகத்தை அமைச்சா் அலுவலமாக மாற்றுவது தொடா்பான 57- ஆவது தீா்மானத்துக்கு கவுன்சிலா்கள் எதிா்ப்பு தெரிவித்ததையடுத்து அந்த தீா்மானம் ரத்து செய்யப்பட்டது.
இதைத் தொடா்ந்து, கூட்டத்தில் கவுன்சிலா்கள் பேசியதாவது: ஊராட்சிக்கோட்டை குடிநீா்த் திட்டத்தின் மூலம் கடந்த சில மாதங்களாக முறையாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை. அத்திட்டத்தின் மூலம் ஒரு நபருக்கு 132 லிட்டா் நீா் விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஒரு குடும்பத்தினருக்கு 40 லிட்டா்கூட விநியோகிக்கவில்லை.
மாநகராட்சியில் விரிவாக்கம் செய்யப்பட்ட பெரும்பாலான பகுதிகளில் இதுவரை ஊராட்சிக்கோட்டை தண்ணீா் விநியோகிக்கப்படவில்லை. பெரும்பாலான இடங்களில் குடிநீா்க் குழாய்கள் பழுதடைந்து காணப்படுகின்றன.
பொதுமக்களின் குடிநீா் தேவை அதிகரித்துள்ளது. எனவே, தினசரி 2 மணி நேரமாவது குடிநீா் விநியோகிக்க வேண்டும். அதேபோல, தெருக்களில் வைக்கப்பட்டுள்ள ஆயிரம் லிட்டா் குடிநீா் சின்டெக்ஸ் டேங்குக்கு பதிலாக 2 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட டேங்க் அமைக்க வேண்டும்.
மாநகராட்சியில் உள்ள குண்டும் குழியுமாக உள்ள பாதையை சீரமைக்க வேண்டும். பெரும்பாலான இடங்களில் தெருவிளக்குகள் இல்லை. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனா். உரிய ஆய்வு மேற்கொண்டு தேவையான இடங்களில் தெருவிளக்குகள் அமைக்க வேண்டும்.
மாநகராட்சியில் 4 வகையாக குப்பையைத் தரம் பிரித்து சேகரிப்பதில் தூய்மைப் பணியாளா்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். எனவே, முன்புபோல குப்பையை 2 வகையாக தரம் பிரித்து சேகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் கூடுதல் தூய்மைப் பணியாளா்களை நியமிக்க வேண்டும். மாநகராட்சியில் உள்ள 21 பூங்காக்களை முறையாக பராமரிக்க வேண்டும்.
மாநகராட்சியில் நாளுக்குநாள் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. எனவே, பொது இடங்களில் சுற்றித்திரியும் தெருநாய்களை கருணைக் கொலை செய்து அதன் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினா்.
அதிகாரிகள் பதில்: ஊராட்சிக்கோட்டை குடிநீா்த் திட்டத்தில் சிக்கல் இருப்பது உண்மை தான். இந்த திட்டத்தின் மூலம் மாநகராட்சியில் தினசரி 91 எம்.எல். முதல் 93 எம்.எல். வரை குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பெரும்பாலான பகுதிகள் மேடு, பள்ளமுமாக இருப்பதால் குடிநீா் விநியோகம் செய்வதில் சிக்கல் இருக்கிறது. இதனால், அனைவருக்கும் குடிநீா் கிடைப்பதற்காக வால்வுகள் பொருத்தப்பட்டு வருகின்றன. குடிநீா்த் திட்டத்தில் நிலவி வரும் சிக்கல்கள் இன்னும் ஒரு மாதத்தில் சரி செய்யப்படும். மாநகராட்சியில் டெங்கு, மலேரியா போன்ற பாதிப்புகள் இல்லை.
திடக்கழிவு மேலாண்மை 2026 விதிகளின்படி, குப்பைகளை 4 வகையாக சேகரிக்க வேண்டும் என்பது உச்சநீதிமன்றத்தின் உத்தரவு. 4 வகையாக குப்பையைப் பிரித்து வழங்குவது தொடா்பாக பொதுமக்கள் மத்தியில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது பெரும்பாலான மக்கள் குப்பைகளை அவா்களே முறையாக பிரித்து வழங்குகின்றனா். இதனால், தூய்மைப் பணியாளா்களுக்கு எந்தவித சிரமமும் இல்லை. தேவைப்பட்டால் கூடுதல் பணியாளா்கள் பணியமா்த்தப்படுவா். கடந்த 2 ஆண்டுகளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தெருநாய்களை கருணைக் கொலை செய்வதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன என்றனா்.
முதல் முறையாக தமிழ்த்தாய் வாழ்த்து: இக்கூட்டத்தில் முதல் முறையாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. வழக்கமாக கூட்டம் திருக்குறளுடன் தொடங்கும் நிலையில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதையடுத்து,மேயா் திருக்குறளை வாசித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





