/

உதகையில் ரோஜா கண்காட்சி தொடக்கம்

கோடை விழா நிகழ்ச்சிகளில் ஒரு பகுதியாக, உதகை அரசினர் ரோஜா பூங்காவில் 2 நாள் ரோஜா கண்காட்சி சனிக்கிழமை தொடங்கியது.

Updated On :12 மே 2013, 5:46 am IST

கோடை விழா நிகழ்ச்சிகளில் ஒரு பகுதியாக, உதகை அரசினர் ரோஜா பூங்காவில் 2 நாள் ரோஜா கண்காட்சி சனிக்கிழமை தொடங்கியது.

   சுமார் 55,000 மலர்களில் பல்வேறு வடிவங்களில் உருவாக்கப்பட்டிருந்த இந்தக் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட தோட்டக்கலைத் துறை சார்பில் 20,000 மலர்களினால் 18 அடி உயரம், 15 அடி அகலத்தில் பிரமாண்ட புறாவின் உருவம் உருவாக்கப்பட்டிருந்தது.

   அதேபோல கோவை மாவட்ட தோட்டக்கலைத் துறை சார்பில் 7,000 மலர்களினால் 18 அடி உயரம், 11 அடி அகலத்தில் மலேசியாவின் இரட்டை கோபுரங்களின் மாதிரி உருவாக்கப்பட்டிருந்தன. தருமபுரி மாவட்ட தோட்டக்கலைத் துறை சார்பில் 6,000 மலர்களில் 7 அடி உயரம், 6 அடி அகலத்தில் 2 பென்குயின் பறவைகளும், கிருஷ்ணகிரி மாவட்ட தோட்டக்கலைத் துறை சார்பில் 8,000 மலர்களினால் 6 அடி உயரம், 4 அடி அகலத்தில் மயில் உருவமும் உருவாக்கப்பட்டிருந்தன.

    மதுரை மாவட்ட தோட்டக்கலைத் துறை சார்பில் 3,500 மலர்களினால் 10 அடி உயரம், 6 அடி அகலத்தில் மீன் உருவமும், திருச்சி மாவட்ட தோட்டக்கலைத் துறை சார்பில் 4,000 மலர்களினால் 6 அடி உயரம், 6 அடி அகலத்தில் காதல் பறவைகளும், ஈரோடு மாவட்ட தோட்டக்கலைத் துறை சார்பில் 6,000 மலர்களினால் பல்வேறு வடிவங்களிலான மலர் அலங்காரங்களும் உருவாக்கப்பட்டிருந்தன.

   தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக நிர்வாகக் குழு உறுப்பினர் கே.ஆர்.அர்ஜுனன், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் மணி, உதவி இயக்குநர்கள் மீராபாய், டாக்டர் ராம்சுந்தர், சிவராமகிருஷ்ணன், உதகை நகர்மன்றத் தலைவர் சத்தியபாமா, துணைத் தலைவர் வி.கோபாலகிருஷ்ணன், மாவட்ட ஊராட்சித் தலைவர் மேனகா, உதகை ஊராட்சி ஒன்றியத் தலைவர் சாந்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.