நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக், காகித டம்ளர்களுக்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்கவும், சுற்றுச்சூழலைப் பாதுகாத்திடவும் அனைத்து வகையான பிளாஸ்டிக் பொருள்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக காகித டம்ளர்களில் கலந்திருக்கும் மெழுகால் உடல்நலத்துக்கு ஏற்படும் தீங்கைத் தடுக்கும் பொருட்டும், பிளாஸ்டிக் டம்ளர்களால் ஏற்படும் தீங்கைத் தடுக்கும் பொருட்டும் திருமண மண்டபங்கள், மதுக் கூடங்கள், உணவகங்கள், சுற்றுலாப் பகுதிகளை சுற்றியுள்ள கடைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் காகித, பிளாஸ்டிக் டம்ளர்களை பயன்படுத்துவது முற்றிலும் தடை செய்யப்படுகிறது.
எனவே, பொதுமக்கள் பிளாஸ்டிக், காகித டம்ளர்களுக்கு மாற்றாக எவர்சில்வர் டம்ளர்கள், கண்ணாடி டம்ளர்கள், மண் குடுவைகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
அதேபோல, வியாபாரிகளும் பொதுமக்களுக்கு காகித, பிளாஸ்டிக் டம்ளர்களை விற்கக் கூடாது. உணவகங்களில் தயார் செய்யப்பட்டுள்ள உணவுப் பொருள்களை பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து விற்பனை செய்வதும் முழுவதுமாகத் தடை செய்யப்படுகிறது.
நீலகிரி மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பிளாஸ்டிக், காகித டம்ளர்கள், உணவுப் பொருள்களை பிளாஸ்டிக் கவர்களில் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இதையையும் மீறி விற்பனையில் ஈடுபடும் மொத்த விற்பனையாளர்களுக்கு ரூ. 20,000, சில்லறை விற்பனையாளர்களுக்கு ரூ. 5,000 அபராதம் விதிக்கப்படும். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.