காலிப் பணியிடங்களை நிரப்பாததால் குன்னூர் அரசு லாலி மருத்துவமனையில் நோயாளிகள் அவதி!

குன்னூர் அரசு லாலி மருத்துவமனையில், காலிப் பணியிடங்களை நிரப்பாமல் உள்ளதால் நோயாளிகள் அவதிப்படுவதாக தன்னார்வ அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.
Updated on
1 min read

குன்னூர் அரசு லாலி மருத்துவமனையில், காலிப் பணியிடங்களை நிரப்பாமல் உள்ளதால் நோயாளிகள் அவதிப்படுவதாக தன்னார்வ அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.
குன்னூர் அரசு லாலி மருத்துவமனை துவங்கி 106 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் இந்த மருத்துவமனை அப்போதைய மக்கள் தொகைக்கு ஏற்றவாறு கட்டப்பட்டது. தற்போது புதிய வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், அல்ட்ரா ஸ்கேன், ரத்த வங்கி, இ.சி.ஜி. உள்ளிட்ட சிறப்புப் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
தற்போது வெளி நோயாளிகள் பிரிவில் தினமும் 500 பேர் வரையிலும், உள்நோயாளிகள் பிரிவில் 100 பேர் வரையிலும் சிகிச்சை பெறுகின்றனர். எனினும், இங்கு அடிப்படை வசதிகள் போதிய அளவு இல்லாததுடன், சுற்றுச்சூழலும் பாதிக்கப்பட்டுள்ளது.
இங்கு பிரேதப் பரிசோதனை செய்யும்போது பயன்படுத்தும் பொருள்களை எரிக்காததால், நாய்கள் அவற்றை இழுத்துச் சென்று, சிகிச்சை அறை பகுதிகளில் போடுகின்றன. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.
வார்டுகளில் போதுமான கழிப்பிட வசதியும், தண்ணீர் வசதியும் இல்லை. இங்குள்ள கழிப்பிடத்தின் "செப்டிக் டாங்க்', பொது வார்டு அருகிலேயே உள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது. இங்குள்ள செவிலியர் விடுதிகளில் பாதுகாப்பற்ற சூழல் காணப்படுகிறது.
இங்கு மயக்க மருந்து நிபுணரும், எலும்பு முறிவு மருத்துவரும் இல்லை. எனவே, விபத்துகளில் பாதிக்கப்படுவோருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க முடியாமல், அவர்கள் 
கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்படுகின்றனர்.
பல லட்சம் ரூபாய் செலவு செய்து சி.டி. ஸ்கேன் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான மருத்துவர் இல்லாததால், ரூ. 500 செலுத்தி இங்கு "ஸ்கேன்' எடுத்தாலும் அதன் முடிவுகளை அறிய, உதகை அல்லது கோவைக்குச் செல்லும் அவல நிலைக்கு நோயாளிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
நிரப்பாத பணியிடங்கள்: இங்கு 15 துப்புரவுப் பணியாளர்கள் இருக்க வேண்டிய இடத்தில் 7 பேர் மட்டுமே உள்ளனர். 3 ஆண் செவிலிய உதவியாளர்கள், 2 பெண் செவிலிய உதவியாளர்கள், 4 ஆண் மருத்துவப் பணியாளர்கள், ஒரு பெண் மருத்துவப் பணியாளர் மட்டுமே பணியில் உள்ளனர். இங்கு 35 பணியிடங்கள் காலியாக உள்ளன. மேலும், இ.சி.ஜி, எக்ஸ்ரே, ஸ்கேனிங் டெக்னீஷியன் பணியிடங்களும் நிரப்பப்படாமல் உள்ளன. எனவே இந்த மருத்துவமனைக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகமும் மாவட்ட சுகாதாரத் துறையும் உடனே செய்ய வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com