/

கூட்டுறவு ஆலை தொழிலாளர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க கோரிக்கை

கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலையில் பணி மூப்பு அடிப்படையில் தொழிலாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என சிஐடியூ வலியுறுத்தியுள்ளது.

Updated On :21 மே 2018, 7:16 pm

கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலையில் பணி மூப்பு அடிப்படையில் தொழிலாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என சிஐடியூ வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து சிஐடியூ மாவட்டச் செயலாளர் ஆல்துரை வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக அரசின் தொழில் கூட்டுறவு வணிக வரித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் மஞ்சூர், குந்தா, கிண்ணக்கொரை, பிக்கட்டி, கைகாட்டி, மேற்குநாடு, இத்தலார், மகாலிங்கா, கரும்பாலம், பிதர்காடு, எப்பநாடு, சாலீஸ்பரி, பிரான்டியர், பந்தலூர், கட்டபெட்டு உள்ளிட்ட 15 கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் சிலர் 20 முதல் 32 ஆண்டுகள் வரை தற்காலிக தொழிலாளர்களாகவே பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் பணிமூப்பு அடிப்படையில் தங்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என நீண்ட காலமாக தொழிற்சாலை நிர்வாகங்களிடம் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதற்கு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கிடையே பதவி உயர்வு பெறாமலேயே தொழிலாளர்கள் பலர் பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டனர்.
பணிமூப்பு அடிப்படையில் தொழிலாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கக் கோரி சிஐடியூ சார்பில் சம்மந்தப்பட்ட தொழிற்சாலை நிர்வாகம், இண்ட்கோ சர்வ் இணை இயக்குநர், தொழில் துறை ஆணையர் உள்ளிட்ட பலருக்கும் ஏற்கனவே மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. எனவே தொழிலாளர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க தமிழக அரசின் தொழிற்கூட்டுறவுத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.