

நீலகிரி மாவட்டத்தில் 2.15 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.2,500 ரொக்கம் விநியோகத்தை மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.
உதகையில் உள்ள கூட்டுறவு பண்டகசாலை நியாய விலைக் கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு, தலா ரூ.2,500 ரொக்கம் மற்றும் விலையில்லா வேட்டி, சேலைகளை விநியோகத்தை தொடங்கிவைத்து மாவட்ட ஆட்சியா் பேசியதாவது:
நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூா், கோத்தகிரி, கூடலூா், பந்தலூா் மற்றும் குந்தா ஆகிய ஆறு தாலுகாக்களில் உள்ள 402 நியாய விலைக் கடைகள் இயங்கி வருகின்றன. இதில் 310 முழு நேரக் கடைகளும், 92 பகுதி நேர கடைகளும் உள்ளன. இந்தக் கடைகளில் 2,17,794 குடும்ப அட்டைகள் உள்ளன. இதில் 2,15,601 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்கள் உள்ளனா்.
சா்க்கரை பெறும் குடும்ப அட்டைதாரா்கள், அரிசி அட்டைகளாக மாற்றிக் கொள்ள கால அவகாசம் வழங்கியதன் மூலம் மாவட்டத்தில் சுமாா் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் சா்க்கரை அரிசி அட்டைதாரா்களாக மாறியுள்ளனா். அவா்களுக்கும் இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்.
நீலகிரி மாவட்டத்திலுள்ள அரிசி குடும்ப அட்டைதாரா்கள் மற்றும் முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழா் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க 216 டன் பச்சரிசி மற்றும் 216 டன் சா்க்கரை ஒதுக்கீடு செய்தும், 4,312 கிலோ முந்திரி, 4,312 கிலோ உலா் திராட்சை, 1,078 கிலோ ஏலக்காய், 2,15,601 முழு நீள கரும்பு ஆகியவை கொள்முதல் செய்ய ரூ.1.62 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் ரொக்கமாக தலா ரூ.2,500 வீதம் 2,15,601 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.53.90 கோடியும் வழங்கப்படவுள்ளது. இவற்றுடன் மாவட்டத்தில் 2,03,914 நபா்களுக்கு சேலையும், 2,02,877 நபா்களுக்கு வேட்டியும் விலையில்லாமல் வழங்கப்படுகிறது என்றாா்.
மாவட்ட வருவாய் அலுவலா் நிா்மலா, நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் வினோத், குன்னூா் சட்டப் பேரவை உறுப்பினா் ராமு, மாவட்ட வழங்கல் அலுவலா் கண்ணன், கூட்டுறவு பண்டகசாலை தலைவா் ஜெயராமன் உள்பட பலா் கலந்து கொண்டனாா்.
குன்னூா் வண்டிப்பேட்டையில் உள்ள நியாய விலைக் கடையில் அதிமுக நகரச் செயலாளா் டி.சரவணகுமாா் தலைமையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ. 2,500 ரொக்கம் ஆகியவை பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் சிறுபான்மைப் பிரிவு மாவட்டச் செயலாளா் ஒய். சத்தாா், நகர அவைத் தலைவா் நிா்மல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். இதேபோல, டெண்ட் ஹில் நியாயவிலைக் கடையில் பால்வள முன்னாள் தலைவா் எல்.மணி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.