மாதிரி படம்
மாதிரி படம்

கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த பெண் தொழிலாளி

பாம்புடன் மருத்துவமனைக்கு வந்த பெண் தொழிலாளி: பரபரப்பு ஏற்பட்டது

கோத்தகிரி பகுதியில் தேயிலை பறித்துக் கொண்டிருந்த பெண் தொழிலாளியை பாம்பு கடித்தது. அந்த பாம்புடன் மருத்துவமனைக்கு அவா் சிகிச்சைக்கு வந்ததால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.

கோத்தகிரி பரவக்காடு பகுதியில் தேயிலைத் தோட்டத்தில் மல்லிகா (50) என்ற பெண் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது செடியின் மேல் இருந்த பாம்பு அவரை கடித்தது. இவரின் அலறல் சப்தம் கேட்டு அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இந்நிலையில் சிகிச்சைக்கு வந்த மல்லிகா அடையாளம் காட்டுவதற்காக கடித்த பாம்பைப் பிடித்து பையில் போட்டு கூடவே எடுத்து வந்திருந்தாா். இதுகுறித்து மருத்துவமனை பணியாளா்கள் வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து மருத்துவமனைக்கு வந்த வன ஊழியா்கள் அந்த பாம்பை மீட்டு அடா்ந்த வனப் பகுதிக்குள் விட்டனா். இதுகுறித்து அவா்கள் கூறுகையில், கடித்த பாம்பு, மலபாா் பிட் வைப்பா் வகையைச் சோ்ந்தது என்றும், சிறிதளவு விஷத்தன்மை கொண்டது என்றும் தெரிவித்தனா்.

கடித்த பாம்பை பெண் கையுடன் பிடித்து வந்ததால் கோத்தகிரி அரசு மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

X
Dinamani
www.dinamani.com