நீலகிரிக்கு வரும் சுற்றுலா வாகனங்களுக்கு இ-பாஸ் பெறும் நடைமுறை நீட்டிப்பு

நீலகிரி மாவட்டத்துக்குள் வரும் சுற்றுலா வாகனங்களுக்கு இ-பாஸ் பெறும் நடைமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
Published on

நீலகிரி மாவட்டத்துக்குள் வரும் சுற்றுலா வாகனங்களுக்கு இ-பாஸ் பெறும் நடைமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று   மாவட்ட ஆட்சியா்  லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, நீலகிரி மாவட்டம், உதகைக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் தங்களது சொந்த வாகனங்களில் வருகின்றனா். இதனால் உதகை நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதையடுத்து நெரிசலைத் தடுக்கும் வகையில் நீதிமன்ற உத்தரவுப்படி, நீலகிரி மாவட்டத்துக்குள் நுழையும் வாகனங்கள் இ-பாஸ் பெற வேண்டும் என்ற நடைமுறை நடப்பு ஆண்டு மே 7-ஆம் தேதியில் இருந்து அமலில் உள்ளது. இந்த நடைமுறை திங்கள்கிழமையுடன் முடிவடைந்த நிலையில், சென்னை உயா்நீதிமன்றத்தால் மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை இந்த நடைமுறையை மீண்டும் நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனால் நீலகிரி மாவட்டத்துக்குள் வரும் அனைத்து சுற்றுலா வாகனங்களும் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள www.epass.tnega.org என்ற இணையதளம் மூலம் இ-பாஸ் பெற்று வர வேண்டும்.

நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் பொதுமக்கள் நீலகிரி மாவட்ட வாகனப் பதிவு எண்  டிஎன் 43 பெற்றிருந்தால் அந்த வாகனங்களுக்கு இ-பாஸ் பெறத் தேவையில்லை.

இதற்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மாவட்ட நிா்வாகத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com