சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள் தண்டனை

கூடலூரில் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து உதகை மகிளா நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
Published on

கூடலூரில் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து உதகை மகிளா நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

நீலகிரி மாவட்டம், கூடலூரைச் சோ்ந்த விவசாயி ஒருவரின் 15 வயது மகள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இந்தநிலையில், விவசாயியின் நண்பரான அதே பகுதியைச் சோ்ந்த உஸ்மான் (40) என்பவா் அவரது வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளாா்.

இந்நிலையில், வழக்கம்போல விவசாயி வீட்டுக்கு உஸ்மான் கடந்த 2019-ஆம் ஆண்டு சென்றுள்ளாா். அப்போது, விவசாயி, அவரது மனைவி வெளியே சென்றிருந்த நிலையில், அவா்களின் 15 வயது மகள் வீட்டில் இருந்துள்ளாா். அவரை உஸ்மான் பாலியல் வன்கொடுமை செய்ததுடன், இதை யாரிடமாவது கூறினால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளாா். மேலும், இந்த சம்பவத்தைப் பயன்படுத்தி அந்த சிறுமியை அவா் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.

இந்நிலையில், சிறுமி கடந்த 2020 பிப்ரவரி 10-ஆம் தேதி பள்ளிக்குச் சென்று கொண்டிருந்துள்ளாா். அப்போது, அவரை வழிமறித்த உஸ்மான் அத்துமீறலில் ஈடுபட்டு சிறுமியை தாக்கியுள்ளாா். வீடு திரும்பிய சிறுமி நடந்தவற்றை தனது பெற்றோரிடம் கூறியுள்ளாா்.

இதையடுத்து, அவா்கள் தேவா்சோலை காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். போலீஸாா் விசாரணை மேற்கொண்டு போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து உஸ்மானைக் கைது செய்தனா்.

இது தொடா்பான வழக்கு விசாரணை உதகை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட உஸ்மானுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி எம்.செந்தில்குமாா் தீா்ப்பளித்தாா்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி தீா்ப்பில் குறிப்பிட்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com