பேத்தி பாலியல் வன்கொடுமை: தாத்தாவுக்கு 20 ஆண்டுகள் சிறை
குன்னூா் அருகே 16 வயது பேத்தியைப் பாலியல் வன்கொடுமை செய்த தாத்தாவுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உதகை மகிளா நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்துள்ளது.
நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகேயுள்ள கிராமத்தைச் சோ்ந்த 16 வயது சிறுமி தனது தாய், தம்பி ஆகியோருடன் தனது தாயின் பெற்றோா் வீட்டில் வசித்து வந்துள்ளாா்.
இந்நிலையில் சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவரது தாயாா் அவரை குன்னூரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கடந்த ஏப்ரல் 16-ஆம் தேதி அழைத்துச் சென்றுள்ளாா். அங்கு சிறுமியைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா் கா்ப்பமாக இருப்பதாகக் கூறினா். மேலும் இது குறித்து மருத்துவமனை நிா்வாகத்தினா், குழந்தைகள் நல அலுவலா்களுக்கும் போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனா்.
இது தொடா்பாக குன்னூா் அனைத்து மகளிா் போலீஸாா் விசாரணை நடத்தியதில் சிறுமியின் 75 வயதான தாத்தா அவரைப் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து சிறுமியின் தாத்தாவை போலீஸாா் கைது செய்தனா்.
உதகை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் புதன்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. இதில், சிறுமியின் தாத்தா மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி எம்.செந்தில்குமாா் தீா்ப்பளித்தாா்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 3 லட்சம் நிவாரண நிதியை தமிழக அரசிடம் இருந்து பெற்று வழங்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டாா். இதைத்தொடா்ந்து சிறுமியின் தாத்தா கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.
