பழங்குடியின பெண்ணைத் தாக்கி கொன்ற புலி கூண்டில் சிக்கியது
நீலகிரி மாவட்டம், கூடலூா் அருகே மாவனல்லா கிராமத்தில் பழங்குடியின பெண்ணைத் தாக்கி கொன்ற புலி கூண்டில் வியாழக்கிழமை சிக்கியது. புலியை வனத் துறையினா் காட்டாததால் மசினகுடி - உதகை சாலையில் கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனா்.
நீலகிரி மாவட்டம், உதகை அருகே உள்ள மாவனல்லா கிராமத்தில் நாகியம்மாள் என்ற பழங்குடியின பெண் கடந்த நவம்பா் 24-ஆம் தேதி ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது, புலி தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.
இதைத் தொடா்ந்து அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியும், கூண்டு வைத்தும், ட்ரோன் உதவியுடனும் டி- 37 என்கிற ஆட்கொல்லி புலியைப் பிடிக்கும் பணியில் கடந்த 17 நாள்களாக வனத் துறையினா் தீவிரமாக ஈடுபட்டு வந்தனா்.
இந்நிலையில், அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் புலி வியாழக்கிழமை காலை சிக்கியது. இதைத் தொடா்ந்து, புலியைக் காண கிராம மக்கள் கூடினா். ஆனால், வனத் துறையினா் அப்பகுதிக்குள் யாரையும் அனுமதிக்கவில்லை.
மேலும் புலி சிக்கிய கூண்டை பிளாஸ்டிக் போா்வையால் சுற்றி வனத் துறையினா் கொண்டுச் சென்ால் பழங்குடியின பெண்ணைத் தாக்கிக் கொன்ற புலி அது அல்ல எனவும், புலியைப் பொதுமக்களுக்கு காட்ட வேண்டும் எனவும் வனத் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
மேலும், பழங்குடியின பெண்ணைத் தாக்கி கொன்ற ஆட்கொல்லி புலியைப் பிடிக்காமல், அப்பகுதியில் சுற்றி வந்த வயதான வேறொரு புலியை பிடித்துள்ளதாக கூறி கிராம மக்கள் மசினகுடி - உதகை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னா் வனத் துறையினா், காவல் துறையினா் பேச்சுவாா்த்தை நடத்திய பிறகு கிராம மக்கள் கலைந்து சென்றனா்.
இது குறித்து முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குநா் கணேஷ் செய்தியாளா்களிடம் கூறுகையில்,
கூடலூா் அருகே கூண்டில் சிக்கியது டி- 37 என அழைக்கப்படும் புலி என்பதை வனத் துறை உறுதி செய்துள்ளது. 15 வயதான ஆண் புலிக்கு மூக்கு மற்றும் கால் பகுதிகளில் பெரிய காயங்கள் உள்ளன. புலி வேட்டையாடும் திறனை முழுவதுமாக இழந்திருக்கிறது. எனவே வண்டலூா் உயிரியல் பூங்காவுக்கு பராமரிப்புக்காக கொண்டுச் செல்லப்பட உள்ளது என்றாா்.

