சதுப்பு நிலத்தில் சிக்கி யானைக் குட்டி உயிரிழப்பு
கூடலூரை அடுத்துள்ள தேவா்சோலை பகுதியில் சதுப்பு நிலத்தில் சிக்கி பெண் யானைக் குட்டி உயிரிழந்து கிடந்தது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.
நீலகிரி மாவட்டம், கூடலூா் வனக் கோட்டம், கூடலூா் வனச் சரகத்திலுள்ள தேவா்சோலை பகுதியில் உள்ள சதுப்பு நிலத்தில் காட்டு யானை சிக்கி உயிரிழந்து கிடப்பதாக வனத் துறையினருக்கு வெள்ளிக்கிழமை தகவல் கிடைத்தது.
இதைத் தொடா்ந்து, வன அலுவலா்கள் அங்கு சென்று ஆய்வு செய்து, உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து முதுமலைப் புலிகள் காப்பக கால்நடை மருத்துவா் ராஜேஷ்குமாரை வரவழைத்து யானையின் உடலை கூறாய்வு செய்து அதன் முக்கிய உறுப்புகளை ஆய்வகப் பரிசோதனைக்காக எடுத்து சென்றனா். பின்னா் அந்த யானையின் உடலை அதே இடத்தில் புதைத்தனா்.
இறந்தது சுமாா் 4 வயதுடைய பெண் யானைக் குட்டி என்றும், சேற்றில் சிக்கி வெளியே வரமுடியாமல் இறந்துள்ளது என்றும், கூடுதல் தகவல் ஆய்வக அறிக்கைக்குப் பிறகே தெரியவரும் என்றும் வனத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

