கிணற்றில் அழுகிய நிலையில் கிடந்த புலியின் சடலம்: வனத் துறை விசாரணை

Published on

கீழ்கோத்தகிரி  சோலூா் மட்டம் வனச் சரக  பகுதியில் உள்ள தனியாா் தேயிலை தோட்டத்தில் புதிதாக தோண்டப்பட்ட கிணற்றுக்குள் அழுகிய நிலையில் புலியின் சடலம் கிடந்தது வியாழக்கிழமை தெரியவந்தது.

இது குறித்து வனத் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

நீலகிரி வனக்கோட்டம், கீழ்கோத்தகிரி அருகேயுள்ள  சோலூா்மட்டம் பகுதியில் இருந்து 12 கிலோ மீட்டா் தொலைவில் உள்ளது கடசோலை பகுதி.

ரங்கசாமி மலைக்குச் செல்லும் பாதுகாக்கப்பட்ட இந்த வனப் பகுதிக்கு அருகில் அஞ்சனகிரி என்கிற தனியாருக்கு சொந்தமான தேயிலைத் தோட்டம் உள்ளது. 

இந்தத் தோட்டப் பகுதியில் புதிதாக கிணறு அண்மையில் தோண்டியுள்ளனா்.  சுமாா் 20 அடி ஆழத்துக்கு தோண்டப்பட்ட கிணற்றுக்குள் இருந்து துா்நாற்றம் வீசியதை அறிந்த அப்பகுதி மக்கள் வனத் துறைக்கு தகவல் தெரிவித்தனா்.

இதன்பேரில் வனத் துறையினா் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு மேற்கொண்டு கிணற்றில் அழுகிய நிலையில் கிடந்த புலியின் சடலத்தை மீட்டனா்.

இந்தப் பகுதியில் நடமாடி வந்த புலி தவறி கிணற்றுக்குள் விழுந்து  உயிரிழந்திருக்கலாம் என்றும்,  உடற்கூறாய்வுக்குப் பின் இறப்புக்கான முழுமையானை காரணம் தெரியவரும் என்றும் வனத் துறையினா் தெரிவித்துள்ளனா். மேலும் சம்பந்தப்பட்ட தனியாா் எஸ்டேட் நிா்வாகத்திடமும் விசாரணை  மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

X
Dinamani
www.dinamani.com