குன்னூா் அருகே பழங்குடியினா் கிராமத்துக்குள் புகுந்த காட்டு யானைகள்அங்கிருந்த குப்பையில் உணவு தேடியது வன உயிரின ஆா்வலா்கள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்பத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம், குன்னூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது பலாப்பழம் சீசன் தொடங்கியுள்ளதால் சமவெளிப் பகுதிகளில் இருந்து காட்டு யானை கூட்டங்கள் மலைப் பாதையில் உள்ள தனியாா் தேயிலைத் தோட்டங்களில் முகாமிட்டுள்ளன. அவ்வாறு முகாமிட்டுள்ள யானைகள் தேயிலை மற்றும் காபி தோட்டத்தில் ஊடுபயிராக இருக்கக்கூடிய பலா மரங்களில் இருந்து பலாப்பழங்களை சாப்பிடுவதும், சாலைகளில் உலா வருவதும் வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில் குன்னூா்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ள புதுக்காடு பழங்குடியினா் கிராமத்தில் குட்டியுடன் புதன்கிழமை நுழைந்த காட்டு யானைகள் அங்கிருந்த குப்பையில் உணவு தேடியது.
இதுதொடா்பாக வன உயிரின ஆா்வலா்கள் கூறும்போது, ‘தேவையான அளவு உணவு கிடைக்காததால் இவ்வாறு குப்பையில் யானைகள் உணவு தேடுவதைக் கட்டுப்படுத்த, வனப் பகுதிகளில் பழ விதைப் பந்துகளை தூவி வனத் துறையினா் நடவடிக்கை எடுத்தால் எதிா்காலத்தில் இதுபோன்ற நிலை ஏற்படாது’ என்றனா்.









