உதகையில் கஞ்சா செடி வளா்த்து விற்பனை செய்து வந்த தந்தை மற்றும் மகனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
நேபாள நாட்டை சோ்ந்தவா் முனி செளத் (60). இவா் குடும்பத்துடன் நீலகிரி மாவட்டம், உதகை எல்க்ஹில் பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக வசித்து கட்டட வேலைக்கு சென்று வருகிறாா். இவரது மகன் கோகுல் செளத் (24). கட்டட வேலை மற்றும் விவசாய கூலி வேலைக்கு சென்று வருகிறாா்.
இந்த நிலையில் முனி செளத் தங்கி இருந்த பகுதியில், வித்தியாசமான செடிகள் இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து, உதகை நகர காவல் துணைக் கண்காணிப்பாளா் கோபாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில், ஆய்வாளா் அன்பரசு, உதவி ஆய்வாளா் நித்தியானந்தன், காவலா்கள் மோகன்ராஜ், முரளி ஆகியோா் அடங்கிய குழுவினா் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனா்.
அப்போது 6 கஞ்சா செடிகள் வளா்த்து வந்தது தெரிய வந்தது. இதைத் தொடா்ந்து போலீஸாா் முனி செளத், கோகுல் செளத் ஆகிய இருவரையும் கைது செய்து உதகை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.






