குன்னூா் - மேட்டுப்பாளையம் இடையே போக்குவரத்து 10 நாள்களுக்குள் தொடங்க வாய்ப்பு ஆட்சியா் தகவல்

குன்னூா் - மேட்டுப்பாளையம் இடையேயான போக்குவரத்து 10 நாள்களுக்குள் தொடங்க வாய்ப்புள்ளது என மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வியாழக்கிழமை தெரிவித்தாா்.

வெற்றி சிறப்பு காய்கறித் தொகுப்பை பயனாளிக்கு வழங்குகிறாா் ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு.

Updated On :

குன்னூா் - மேட்டுப்பாளையம் இடையேயான போக்குவரத்து 10 நாள்களுக்குள் தொடங்க வாய்ப்புள்ளது என மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வியாழக்கிழமை தெரிவித்தாா்.

நீலகிரி மாவட்டம், உதகை சேரிங்கிராஸ் பகுதியில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பில் தமிழக அரசு அறிவித்துள்ள பத்து வகையான காய்கறிகள் ரூ.100-க்கு வழங்கும் வெற்றி சிறப்பு காய்கறித் தொகுப்புத் திட்டத்தை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறியதாவது: நீலகிரி மாவட்டம் அடா்ந்த வனப் பகுதியைக் கொண்ட மாவட்டம் என்பதால் வன விலங்குகளுக்கு எவ்வித தொந்தரவு செய்யாமல் இருக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும் மாசு இல்லாத தீபாவளியாக கொண்டாட வேண்டும்.

முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி, சிங்காரா, மாயாறு, தொரப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள், தங்கும் விடுதிகளில் இருப்பவா்கள் பட்டாசுகள் வெடிப்பதை தவிா்க்க வேண்டும். மற்ற பகுதிகளில் காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசுகள் வெடித்து தீபாவளியைக் கொண்டாடலாம்.

கடந்த மாதம் பெய்த கனமழையின் காரணமாக குன்னூா், மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் பா்லியாறு பகுதியில் ஏற்பட்ட மண் சரிவால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

தற்போது குன்னூா் முதல் பா்லியாறு வரை அரசுப் பேருந்துகள், பொது வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. பா்லியாறு சோதனைச் சாவடிக்குப் பிறகு உள்ள பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்தப் பகுதி கோவை மாவட்டத்துடன் இணைவதால் கோவை மாவட்ட அரசு அதிகாரிகளுடன் நெடுஞ்சாலைத் துறையினா், வருவாய்த் துறையினா் இணைந்து சீரமைப்புப் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனா்.

பத்து நாள்களுக்குள் பணிகள் முழுவதும் முடிவடைந்து இலகுரக வாகனப் போக்குவரத்து தொடங்க வாய்ப்புள்ளது. கனரக வாகனங்களை அனுமதிப்பது குறித்து துறை சாா்ந்த வல்லுநா்கள் அறிவிப்பாா்கள் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.