ஊதியூர் மலைக் கோயில்களுக்கு படிக்கட்டுகள் வேண்டும்: பக்தர்கள் கோரிக்கை
By DIN | Published On : 25th November 2017 07:50 AM | Last Updated : 25th November 2017 07:50 AM | அ+அ அ- |

ஊதியூர் மலையில் உள்ள கோயில்களுக்கு பக்தர்கள் இடையூறு இன்றி சென்று தரிசனம் செய்யும் வகையில் பாதை, படிக்கட்டுகளை அமைக்க வனத் துறை அனுமதிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காங்கயம் அருகே, தாராபுரம் செல்லும் சாலையில் உள்ளது ஊதியூர். இங்குள்ள பொன்னூதி மலை வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. 13 கி.மீ. சுற்றளவு கொண்ட இந்த மலையில்தான் கொங்கணச் சித்தர் தவம் செய்து, பின்னர் திருப்பதி சென்று இறைவனுடன் ஐக்கியமானதாக நம்பப்படுகிறது. கொங்கணர் தவம் செய்த காரணத்தால் இந்த மலை புனிதம் நிறைந்ததாகக் கருதப்படுகிறது.
கொங்கணச் சித்தர் தவம் செய்த குகைக்கு அருகில் கொங்கணருக்கு பக்தர்களால் கோயில் எழுப்பப்பட்டு அமாவாசை, பெளர்ணமி நாள்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். தவிர மலையின் அடிவாரம் தொடங்கி பாதவிநாயகர் கோயில், இடும்பன் கோயில், ஆஞ்சநேயர் கோயில், உத்தண்ட வேலாயுதசுவாமி கோயில், கன்னிமார், கருப்பராயசுவாமி கோயில், முனியப்பசுவாமி கோயில், கொங்கணரின் சீடரான செட்டித்தம்பிரான் கோயில், உச்சிப்பிள்ளையார் கோயில், மலையின் தெற்கு பக்கத்தில் மலைக் கன்னிமார்சுவாமி கோயில் ஆகிய கோயில்கள் உள்ளன.
அறநிலையத்துறை வசம் உள்ள இந்தக் கோயில்களில் உத்தண்ட வேலாயுதசுவாமி கோயில் வரை பக்தர்கள் சென்றுவர படிக்கட்டுகள் உள்ளன. அதைத் தொடர்ந்து செட்டித் தம்பிரான், உச்சிப் பிள்ளையார், முனியப்பன், கொங்கணர் கோயில், குகை உள்ளிட்டவைகளுக்குச் செல்ல கரடுமுரடான ஒற்றையடிப் பாதையில் பாதையில்தான் செல்ல வேண்டியுள்ளது. 5 கி.மீ. தூரத்துக்கு கரடுமுரடான பாதையிலேயே பயணிக்க வேண்டியுள்ளதால், பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்தக் கோயில்களுக்கு படிக்கட்டுகள் அமைக்க பக்தர்கள் முன்வந்து தயாராக இருந்தும், வனத் துறை படிக்கட்டுகள் அமைக்க அனுமதி மறுப்பதாகக் கூறுகின்றனர். உத்தண்ட வேலாயுதசுவாமி கோயில்வரை வாகனங்கள் செல்வதற்கு மலைப் பாதையும், நடந்து செல்லும் பக்தர்களுக்கு படிக்கட்டு வசதிகளும் உள்ளன. ஆனால், வாகனங்கள் செல்லும் பாதை சீரமைக்கப்படாததால், போக்குவரத்துக்கு லாயக்கற்ற பாதையாக மாறியதால் எந்த வாகனமும் தற்போது செல்ல முடியவில்லை.
இதுகுறித்து, பக்தர்கள் கூறியதாவது:
ஊதியூர் மலைக் கோயில்களுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக பெளர்ணமி, அமாவாசை நாள்களில் கொங்கணச் சித்தர் கோயில், குகை, செட்டித்தம்பிரான் கோயிலுக்கு கோவை, திருப்பூர், தாராபுரம், பொள்ளாச்சி, காங்கயம், கரூர், திருச்சி, ஈரோடு மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். சரியான பாதை வசதி இல்லாத காரணத்தால் கரடுமுரடான பாதையில் பக்தர்கள் செல்லவேண்டியுள்ளது.
எனவே, அறநிலையத் துறையினர் உத்தண்ட வேலாயுதசுவாமி கோயில்வரை தார் சாலை அமைக்க முன்வர வேண்டும். மேலும், செட்டித் தம்பிரான், உச்சிப்பிள்ளையார், கொங்கணச்சித்தர் கோயில்களுக்கு படிக்கட்டுகள் அமைக்க பக்தர்கள் தயார் நிலையில் உள்ளனர். அதற்கு வனத் துறை அனுமதியளிக்க வேண்டும் என்றனர்.