பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி திருப்பூரில் இரு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட ஜக்டோ-ஜியோ அமைப்பைச் சேர்ந்த 800 பேர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.
தமிழகம் முழுவதிலும் செவ்வாய்க்கிழமை முதல் 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாமல் இழைக்கப்பட்டு வரும் அநீதி களையப்பட வேண்டும். அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகளுக்கு மத்திய அரசின் முடிவின்படி புதிய ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு மாறாக தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை பணிமாற்றம் செய்வதை ரத்து செய்ய வேண்டும். 3,500 தொடக்கப் பள்ளிகளை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைக்கும் முடிவினையும், 3, 500 சத்துணவு மையங்களை மூடும் முடிவினையும் ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் முழுவதில் போராட்டத்தின் முதல் நாளான செவ்வாய்க்கிமை சுமார் 8 ஆயிரம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து நிலையம் முன்பு புதன்கிழமை நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்துக்கு தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ஜோசப் தலைமை வகித்தார். இதில், பங்கேற்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் 426 பேரை திருப்பூர் வடக்கு காவல் துறையினர் கைது செய்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் சரவணன் தலைமை வகித்தார். இதில், பங்கேற்ற 375 பேரை திருப்பூர் தெற்கு காவல் துறையினர் கைது செய்தனர்.
மாவட்டத்தில் 6,069 ஆசிரியர்கள் விடுப்பு... மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 8,734 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில், 2,302 ஆசிரியர்கள் மட்டுமே புதன்கிழமை பணிக்கு வந்துள்ளனர். 363 பேர் பல்வேறு காரணங்களால் விடுப்பு எடுத்துள்ளனர். ஆனால், மாவட்டம் முழுதிலும் 6,069 ஆசிரியர்கள் பணியைப் புறக்கணித்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பூரில் 40 சதவீதப் பள்ளிகள் மூடல்... காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தின் காரணமாக திருப்பூர் மாநகரில் 40 சதவீதப் பள்ளிகள் செயல்படவில்லை. ஒரு சில அரசுப் பள்ளிகளில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் மூலமாக மாணவர்களுக்குப் பாடம் நடத்தப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.
உடுமலையில் 650 பேர் கைது
உடுமலையில் ஜேக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 650 பேர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.
உடுமலை மத்திய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் 20க்கும் மேற்பட்ட அமைப்புக்களைச் சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். டிஎஸ்பி ஜெயச்சந்திரன் தலைமையில் நூற்றுக்கும்
மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 650 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்தப் போராட்டத்தால் உடுமலை-பழனி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அவிநாசியில் 500 பேர் கைது
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவிநாசியில் மறியிலில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 500 பேர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.
அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகே ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மறியலில் புதன்கிழமை ஈடுபட்டனர். இதில் ஆசிரியர்கள், வருவாய்த் துறையினர், உள்ளாட்சித் துறையினர், சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அவிநாசி போலீஸார் அவர்களை கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். அவர்கள் மாலை விடுவிக்கப்பட்டனர்.
காங்கயத்தில் 310 பேர் கைது
ஜாக்டோ-ஜியோ சார்பில் காங்கயத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட 310 பேர் கைது செய்யப்பட்டனர்.
காங்கயம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கோவை தேசிய நெடுஞ்சாலையில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 310 பேரை காங்கயம் காவல்துறையினர் கைது செய்தனர். கரூர் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்கவைக்கப்பட்ட இவர்கள் இரவு 7 மணி அளவில் விடுவிக்கப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








