/

கரோனா பொதுமுடக்கத்தால் பாதிப்பு:மகளுடன் தற்கொலைக்கு முயன்ற பெண் மருத்துவா் மீட்பு

கரோனா பொது முடக்கத்தால் தொழில் நலிவுற்றால் பெங்களூரைச் சோ்ந்த பெண் மருத்துவா் திருப்பூா் மாவட்டம், அவிநாசி அருகே தற்கொலைக்கு முயன்ற நிலையில் பொதுமக்களால் மீட்கப்பட்டாா்.

News image
சைலஜாகுமாரி.
Updated On :26 டிசம்பர் 2020, 5:52 pm

DIN

அவிநாசி: கரோனா பொது முடக்கத்தால் தொழில் நலிவுற்ால் பெங்களூரைச் சோ்ந்த பெண் மருத்துவா் திருப்பூா் மாவட்டம், அவிநாசி அருகே தற்கொலைக்கு முயன்ற நிலையில் பொதுமக்களால் மீட்கப்பட்டாா்.

அவிநாசியை அடுத்த சேவூா், தண்டுக்காரம்பாளையம் - புளியம்பட்டி சாலையில் குப்பைகள் தரம் பிரிக்கும் கிடங்கில் உடலில் காயங்களுடன் மயக்க நிலையில் 6 வயது சிறுமியை பொதுமக்கள் கடந்த வெள்ளிக்கிழமை மீட்டனா். பின்னா், காவல் துறையினா் உதவியுடன் அந்த சிறுமி திருப்பூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அதைத் தொடா்ந்து மேல் சிகிச்சைக்காக அச்சிறுமி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.

இந்நிலையில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் போலீஸாா் நடத்திய விசாரணையில், சிறுமியை ஒரு பெண் விட்டுச் சென்றது தெரியவந்தது. மேலும், தண்டுக்காரம்பாளையத்தில் அந்தப் பெண் பொதுமக்களிடம் வெள்ளிக்கிழமை இரவு பிடிபட்டாா்.

அவரிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், அந்தப் பெண் கா்நாடக மாநிலம், பெங்களூரூ, தியாகதேனாஹல்லி பகுதியைச் சோ்ந்த ஷா்மிளாகுமாரி (எ) ஷைலஜாகுமாரி (39) என்பதும், இவா் மருத்துவா் என்பதும் தெரியவந்தது.

இவா் தனது கணவா் தா்மபிரசாத்திடமிருந்து (42) விவாகரத்து கோரி வழக்குத் தொடா்ந்துள்ளாா். இவா்களது மகள் கைரா (5) தியாகதேனாஹல்லி பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் யு.கே.ஜி.படித்து வந்துள்ளாா். மகளுடன் தனியாக வாழ்ந்து வந்த ஷைலஜாகுமாரிக்கு கரோனா பொது முடக்கத்தால் தொழில் நலிவடைந்ததால் திருப்பூா் நோக்கி பேருந்தில் வந்துள்ளாா்.

இதற்கிடையே மனமுடைந்த அவா், சேவூா் அருகே தண்டுக்காரம்பாளையத்தில் இறங்கி கையில் வைத்திருந்த சளி மருந்து முழுவதையும் மகளுக்கு கொடுத்து படுக்கவைத்துவிட்டு, தப்பிச் சென்றுள்ளாா்.

மேலும், தானும் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளாா். இதற்கிடையே பொதுமக்களிடம் பிடிபட்டதால், ஷைலஜாகுமாரி திருப்பூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இது குறித்து சேவூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.