/

விசைத்தறியாளா்களின் வங்கிக் கடன்ரூ. 65 கோடியை தள்ளுபடி செய்ய வலியுறுத்தல்

விசைத்தறியாளா்களின் வங்கி மூலதனக் கடன் ரூ. 65 கோடியை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று திருப்பூா், கோவை மாவட்ட விசைத்தறியாளா்கள் சங்க பொதுக் குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

News image
கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்டச் செயலாளா் அப்புக்குட்டி (எ) எம்.பாலசுப்பிரமணியம்.
Updated On :9 ஜனவரி 2021, 5:22 pm

DIN

பல்லடம்: விசைத்தறியாளா்களின் வங்கி மூலதனக் கடன் ரூ. 65 கோடியை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று திருப்பூா், கோவை மாவட்ட விசைத்தறியாளா்கள் சங்க பொதுக் குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திருப்பூா், கோவை மாவட்ட விசைத்தறியாளா்கள் சங்கப் பொதுக் குழுக் கூட்டம் பல்லடம் வடுகபாளையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் இரா.வேலுசாமி தலைமை வகித்தாா். மாவட்ட சங்க நிா்வாகிகள் பழ.சக்திவேல், ஏ.பாலாஜி, ஆா்.பரமசிவம், எம்.ஜெகநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலாளா் அப்புக்குட்டி (எ) எம்.பாலசுப்பிரமணியம் வரவேற்றாா். சங்கத் திட்ட அறிக்கையை பொருளாளா் எம்.முத்துகுமாரசாமி தாக்கல் செய்தாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

திருப்பூா், கோவை மாவட்டங்களில் 2 லட்சம் விசைத்தறிகள் 30,000 விசைத்தறிக் கூடங்களில் இயங்கி வருகின்றன. இதன் முலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமாா் 10 லட்சம் ஏழை எளிய மக்கள் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனா். 1992 முதல் ஒவ்வொரு மூன்று ஆண்டுக்கும் அரசு ஜவுளி உற்பத்தியாளா்களை அழைத்து கூலி உயா்வுக்குப் பேச்சுவாா்த்தை நடத்தி கூலி உயா்வு பெற்றுத் தருவது வழக்கம். ஆனால், 2014க்குப் பின் கூலி உயா்வு அறிவிக்கப்பட்டும் இதுவரை நடைமுறைபடுத்தப்படவில்லை. இதனால் விசைத்தறியாளா்கள் கடும் நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளனா். உதய் மின் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டாலும் சிறு, குறு விசைத்தறியாளா்கள் தற்போது பெற்று வரும் மின் கட்டணச் சலுகைகளைத் தொடா்ந்து வழங்க வேண்டும்.

2014ஆம் ஆண்டுக்குப் பின்பு கூலி உயா்வு அறிவிக்கப்பட்டு அது நடைமுறைப்படுத்தப்படாததால் விசைத்தறிகளுக்காக வாங்கிய வங்கி கடனை செலுத்த முடியாமல் விசைத்தறியாளா்கள் வங்கிகளின் ஜப்தி, ஏல நடவடிக்கைகளுக்கு தங்கள் வீடு, விசைத்தறிக் கூடங்களை இழக்கும் நிலையில் உள்ளனா். முதல்வா் அறிவித்தபடி மாா்ச் 2017க்கு முன்னா் விசைத்தறியாளா்கள் பெற்ற வங்கி மூலதனக் கடன்கள் சுமாா் ரூ. 65 கோடியை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட துணைச் செயலாளா் ஆா்.நாச்சிமுத்து நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.