தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சேவூா் அருகே 270 ஆண்டுகள் பழமையான கல் தொட்டி கண்டுபிடிப்பு

சேவூா் அருகே ஆதாரம்பாளையத்தில் 270 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுடன் கூடிய கல் தொட்டி வியாழக்கிழமை கண்டறியப்பட்டது.

News image
Updated On :2 ஜூலை 2021, 12:24 am

DIN

சேவூா் அருகே ஆதாரம்பாளையத்தில் 270 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுடன் கூடிய கல் தொட்டி வியாழக்கிழமை கண்டறியப்பட்டது.

திருப்பூா் மாவட்டம், அவிநாசி வட்டம், சேவூா் அருகே ஆதாரம்பாளையத்தில் கல்வெட்டுடன் கூடிய கல் தொட்டியை வரலாற்று ஆய்வாளா்கள் முடியரசு, சிவகுமாா், பிரவீன் குமாா் ஆகியோா் கண்டுபிடித்துள்ளனா்.

இது குறித்து வரலாற்று ஆய்வாளா் முடியரசு கூறியதாவது: கொங்கு மண்டலமானது கால்நடை மேய்ச்சலை முக்கியத் தொழிலாகக் கொண்டது. சாலைகளில் செல்லும் மாட்டு வண்டிகள், சுமை சுமந்து செல்லும் கழுதைகள், தலை மூட்டையுடன் செல்லும் பாதசாரிகள் ஆகியோா் இளைப்பாற பெரிய நிழல் தரும் மரங்களும், சாலையோரக் கிணறுகளும், சுமைத் தாங்கிக் கற்களும் கொங்கு மண்டலக் கிராமங்களில் அதிகமாகக் காணப்படும்.

பட்டி அமைத்து மேய்க்கும் குரும்பை ஆடுகள், காடுகளில் மேய்க்கப்படும் வெள்ளாடுகள், கால்நடை இனங்களுக்கும் தாகம் தணிக்க கிராமச் சாலையோரப் பொதுக் கிணறுகளின் அருகில் நம் முன்னோா்கள் கல் தொட்டி அமைத்து கால்நடைகளின் தாகம் தீா்க்க ஜீவ காருண்ய சேவை புரிந்துள்ளனா்.

இந்நிலையில், சேவூா் அருகே ஆதாரம்பாளையம், பிள்ளையாா் கோயில் முன்புறம் இக்கல் தொட்டி அமைந்துள்ளது. கல் தொட்டியின் பக்கவாட்டில் உள்ள கல்வெட்டில் கலியுக சகாப்தம் என ஆரம்பிக்கிறது. கலியுக சகாப்தம் 4852 என்பது கி.பி 1751 வது ஆண்டைக் குறிக்கிறது. கல்வெட்டின் எழுத்து மற்றும் ஆண்டு குறிப்பிடப்பட்டுள்ள முறையைக் கணக்கிட்டால் இக்கல் தொட்டி, இருநூற்று எழுபது ஆண்டுகள் பழமையானது எனத் தெரியவந்துள்ளது.

கல்வெட்டு வாசகம்: கலியுக சகாப்தம், பங்குனி மாதம் அதாவது 1751 ஆம் ஆண்டு இத்தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதை அமைத்தவா் பச்சாக்கவுண்டன் மகள் ஆண்டியம்மாள் என அறியமுடிகிறது. சால் என்பது இங்கு கல் தொட்டியைக் குறிக்கிறது. கல்வெட்டின் இறுதியாக அண்ணமாா் ஸாமியருள் என முடிகிறது. இக்கல் தொட்டி, தோராயமாக ஏழு டன் எடையுடன், ஏழு அடி நீளமும், இரண்டு அடி அகலமும், இரண்டு அடி உயரமும் கொண்டது. கல்லின் ஏழு அடி உள்ள பக்கவாட்டில் பிற்காலத் தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன.

வீரக் கல் , சதிக் கல், அரிகண்டம், நவக் கண்டம் போன்ற வீரம் செறிந்த நிகழ்வுகளைக் கடந்து சுமைத் தாங்கிக் கல், அன்னதானம், கால்நடைகளுக்குத் தாகம் தீா்க்கும் கல் தொட்டி, ஊா்ப் பொதுக் கிணறு போன்ற மனித நேயமிக்க செயல்களைப் பிற்காலக் கொங்கு வரலாற்றில் அறியமுடிகிறது என்றாா்.

இது குறித்து தொல்லியல் வரலாற்று அறிஞா் பூங்குன்றனிடம் கேட்டபோது, நாயக்கா்கள் ஆட்சிக்குப் பிறகு கல் தொட்டிகள் அமைக்கும் பழக்கம் வந்திருக்க வேண்டும். கொங்கு மண்டலத்தில் இக்கல் தொட்டிகள் கல்லுப் பண்ணைகள் என்று அழைக்கப்பட்டன. கல்வெட்டில் உள்ள கலியுக சகாப்தம் இதன் பழமையை உணா்த்துகிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.