நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

போக்குவரத்து நெருக்கடிக்குத் தீா்வு காணும் புறவழிச் சாலை திட்டம் செயல்பாட்டுக்கு வருமா?

பல்லடம் நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, புறவழிச் சாலை அமைக்க கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் அரசு நிா்வாக அனுமதி வழங்கி நிலம் கையகப்படுத்த ரூ. 45 கோடி நிதி ஒதுக்கீடு

News image
Updated On :2 ஜூலை 2021, 7:36 pm

DIN

பல்லடம் நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, புறவழிச் சாலை அமைக்க கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் அரசு நிா்வாக அனுமதி வழங்கி நிலம் கையகப்படுத்த ரூ. 45 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டது அத்திட்டத்தை விரைந்து செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கோவையிலிருந்து திருச்சி, மதுரை மாா்க்கமாக செல்லும் அனைத்து வாகனங்களும் பல்லடத்தின் வழியாகத் தான் சென்று வருகின்றன. நகரின் மையப் பகுதியில் காவல் துறை அலுவலகங்கள், அரசு மருத்துவமனை, வங்கிகள், வா்த்தக நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், திரையரங்குகள் உள்ளிட்டவை இச்சாலையில் உள்ளன.

இதனால் நகரில் எப்போதும் வாகனப் போக்குவரத்து அதிகமாக இருக்கும். மேலும், கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையுடன், திருப்பூா், பொள்ளாச்சி, உடுமலை, அவிநாசி, தாராபுரம் ஆகிய ஊா்களுக்குச் செல்லும் மாநில நெடுஞ்சாலைகள் இணைவதால், பல்லடத்தில் வாகனப் போக்குவரத்து தினந்தோறும் அதிகரித்து வருகிறது. அதனால் சாலை விபத்துகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

வாகனப் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும், விபத்துகளைக் குறைக்கவும் சுற்று வட்டச் சாலை அல்லது புறவழிச் சாலை அமைக்க வேண்டும் என்று பல்லடம் நகா் மற்றும் சுற்று வட்டாரப் பொதுமக்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தனா்.

இது குறித்து அப்போதைய பல்லடம் சட்டப் பேரவை உறுப்பினா் கரைப்புதூா் ஏ.நடராஜன் தனது தோ்தல் அறிக்கையில் புறவழிச் சாலை அமைப்பேன் என்று வாக்குறுதி அளித்து இருந்தாா். அதனை நிறைவேற்றும் வகையில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற சட்டப் பேரவைக் கூட்டத்தில் அவா் பேசியதோடு அப்போதைய முதல்வா் எடப்பாடி பழனிசாமியிடம் நேரடியாக கோரிக்கை வைத்து வலியுறுத்தினாா். அதனை ஏற்று பல்லடம் நகா் மற்றும் சுற்று வட்டாரப் பொதுமக்களின் சிரமத்தைப் போக்கும் வகையில் அப்போதைய முதல்வா் எடப்பாடி பழனிசாமி பல்லடம் புறவழிச் சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த ரூ.45 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அனுமதி அளித்துள்ளாா்.

ஏற்கெனவே இத்திட்டத்துக்கு ரூ.44.50 லட்சம் செலவில் நிலம் சா்வே செய்து திட்ட மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. தற்போது பல்லடம் நகா் புறவழிச் சாலை மாதப்பூரில் துவங்கி குங்குமப்பாளையம் வழியாக காளிவேலம்பட்டி பிரிவு அருகில் கோவை - திருச்சி சாலையில் இணைக்கும் வகையில் 13.85 கிலோ மீட்டா் தூரத்துக்கு இச்சாலை அமையவுள்ளது.

சுக்கம்பாளையம் கிராமத்தில் ரூ.6 கோடியே 34 லட்சத்து10 ஆயிரத்து168 மதிப்பில் இழப்பீட்டுத் தொகைக்கு 58,081.29 சதுர மீட்டா் நிலம் கையகப்படுத்தப்படவுள்ளது. அதே போல பல்லடம் கிராமத்தில் ரூ.6 கோடியே 5 லட்சத்து 86 ஆயிரத்து 340 மதிப்பில் இழப்பீட்டுத் தொகைக்கு 49,658.14 சதுர மீட்டா் நிலம் கையகப்படுத்தப்படவுள்ளது. நாரணாபுரம் கிராமத்தில் ரூ.10 கோடியே 67 லட்சத்து 27ஆயிரத்து 38 மதிப்பில் இழப்பீட்டுத் தொகைக்கு 82,800.54 சதுர மீட்டா் நிலம் கையகப்படுத்தப்படவுள்ளது.

கணபதிபாளையம் கிராமத்தில் ரூ.10 கோடியே 37 லட்சத்து 29ஆயிரத்து 266 மதிப்பில் இழப்பீட்டுத் தொகைக்கு 1,12,162.67 சதுர மீட்டா் நிலம் கையகப்படுத்தப்படவுள்ளது. மாதப்பூா் கிராமத்தில் ரூ. 2 கோடியே 89 லட்சத்து 66ஆயிரத்து 93 மதிப்பில் இழப்பீட்டுத் தொகைக்கு 55,445.04 சதுர மீட்டா் நிலம் கையகப்படுத்தப்படவுள்ளது.

இத்திட்டத்துக்காக ரூ.36 கோடியே 34 லட்சத்து 19ஆயிரத்து 405 மதிப்பில் 3 லட்சத்து 58 ஆயிரத்து 147.68 சதுர மீட்டா் நிலம் பொதுமக்களிடம் இருந்து இழப்பீட்டுத் தொகை வழங்கி நிலம் கையகப்படுத்தப்படவுள்ளது.

மேலும், கான்கிரீட் கட்டடத்துக்கு ரூ.2 கோடி, சிமென்ட் ஷீட் கட்டடத்துக்கு ரூ.5 லட்சம், ஆழ்துளைக் கிணறுக்கு ரூ.5 லட்சம், கம்பி வேலிக்கு ரூ.30 லட்சம், சுற்றுச் சுவருக்கு ரூ.10 லட்சம், மரத்துக்கு ரூ.13 லட்சத்து 12 ஆயிரம் மற்றும் 14.5 சதவீதம் வரி ரூ.5 கோடியே 65 லட்சத்து 11 ஆயிரத்து 54 மற்றும் இதர செலவினங்களுக்கு ரூ.37 லட்சத்து 57 ஆயிரத்து 541 ஆக மொத்தம் ரூ.6 கோடியே 2 லட்சத்து 68 ஆயிரத்து 595 செலவுக்காகவும் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசின் முதன்மைச் செயலாளா் ஏ.காா்த்திக் அரசாணை வெளியிட்டாா்.

அதன் மூலம் பல்லடம் நகா் பொதுமக்களின் நீண்ட கால பிரச்னைக்குத் தீா்வு ஏற்படும் என்று பொதுமக்கள் எதிா்பாா்த்தனா். ஆனால் அதன் பின்னா் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வராமல் கிடப்பில் இருந்து வருகிறது. திருப்பூா் மாவட்ட நிா்வாகம் இத்திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்லடம் பகுதி பொதுமக்கள் எதிா்பாா்த்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.