/

காங்கேயம் அருகே பேருந்து மீது கார் மோதி விபத்து: 3 பேர் பலி: 3 பேர் கவலைக்கிடம்

காங்கேயம் அருகே கொடுவாய் பகுதியில் பேருந்து மீது கார் மோதி, காரில் வந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 3 பேர் உயிருக்குப் போராடிய நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

News image
விபத்துக்குள்ளான பேருந்து-கார்
Updated On :1 பிப்ரவரி 2024, 9:58 am

DIN

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே கொடுவாய் பகுதியில் பேருந்து மீது கார் மோதி, காரில் வந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 3 பேர் உயிருக்குப் போராடிய நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருப்பூரில் இருந்து தனியார் பேருந்து ஒன்று வியாழக்கிழமை மாலை பழனி நோக்கி சென்று கொண்டிருந்தது. அதேபோல கோவை மாவட்டம், சூலூர் பகுதியைச் சேர்ந்த 6 பேர் சூலூர் செல்வதற்காக ஒரு காரில் தாராபுரத்தில் இருந்து அவிநாசிபாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

மாலை 3.45 மணியளவில், கொடுவாய்-சக்திவிநாயகபுரம் அருகே வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக சூலூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் வந்த கார், 4 வழிச் சாலையின் நடுவில் இருந்த தடுப்பின் மீது பயங்கரமாக மோதி, பின்னர் எதிரே பழனி நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தின் முன்புறம் மீது மோதியது.

Story image

இந்த விபத்தில் கார் முற்றிலுமாக உருக்குலைந்து, காரில் பயணித்தவர்களின் உடல்கள் ஆங்காங்கே ரத்த வெள்ளத்தில் சிதறின. இதில், காரில் பயணித்த வீரக்குமார் (31), முருகேசன் (32), சஜீத் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், காரில் வந்த மகேஷ்குமார், கிஷோர்குமார் மற்றும் மேலும் ஒருவர் என 3 பேர் மீட்கப்பட்டு, படுகாயங்களுடன் திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய், காங்கயம் காவல் துணை கண்காணிப்பாளர் பார்த்திபன் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.