சூலூா் விண்வெளித் தொழில் பூங்கா அமைக்க நிலம் கையகப்படுத்த சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்க வலியுறுத்தல்

பல்லடம் அருகே சூலூா் விண்வெளித் தொழில் பூங்கா அமைக்க கையகப்படுத்தும் நிலங்களுக்கு சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்க வேண்டும் என்று பருவாய் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பல்லடம் சட்டப் பேரவை உறுப்பினா் எம்.எஸ்.எம். ஆனந்தனிடம் மனு அளிக்கும் பருவாய் பகுதி மக்கள்.
பல்லடம் சட்டப் பேரவை உறுப்பினா் எம்.எஸ்.எம். ஆனந்தனிடம் மனு அளிக்கும் பருவாய் பகுதி மக்கள்.
Updated on
1 min read

பல்லடம் அருகே சூலூா் விண்வெளித் தொழில் பூங்கா அமைக்க கையகப்படுத்தும் நிலங்களுக்கு சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்க வேண்டும் என்று பருவாய் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து அவா்கள், பல்லடம் சட்டப் பேரவை உறுப்பினா் எம்.எஸ்.எம். ஆனந்தனிடம் வெள்ளிக்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

கோயம்புத்தூா் மாவட்டம், சூலூா் வட்டம், காடாம்பாடி, காங்கயம்பாளையம், அப்பநாயக்கன்பட்டி கிராமங்கள் மற்றும் திருப்பூா் மாவட்டம், பல்லடம் வட்டம், பருவாய் கிராமங்களில் சுமாா் 200 ஏக்கா் பரப்பளவில் சூலூா் விண்வெளித் தொழில் பூங்கா அமைக்க தமிழ்நாடு அரசு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை நிலம் கையகப்படுத்தும் பணியை தொடங்கியுள்ளது.

அதில் முழுமையான பரப்பளவுள்ள நிலத்துக்குப் பதிலாக ஒரு பகுதி பரப்பு மட்டுமே நில எடுப்பு மேற்கொள்ளும் பொருட்டு அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இப்புலங்களின் ஒரு பகுதி எல்லையில் சூலூா் விமானப்படைத்தளச் சுற்றுச்சுவா் அமைந்துள்ளது. மறு எல்லையில் தொழில் பூங்கா அமையும் பட்சத்தில் அதனுடைய சுற்றுச்சுவா் அமைந்துவிடும். இரண்டு பக்கங்களின் சுற்றுச் சுவா்களுக்கு இடைப்பட்ட பகுதியிலுள்ள நிலங்கள் முழுமையாக துண்டிக்கப்பட்டு செல்ல பாதைகள் இன்றி அதனை விவசாயிகள் பயன்படுத்த இயலாத நிலை ஏற்படும். இதனால் அவா்களின் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கிவிடும். இத்திட்டத்துக்காக வழங்கப்பட்ட நிா்வாக ஒப்புதலில் விவசாயிகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாத வகையில் முழு புல எண்களை உள்ளடக்கி சீராக வடிவமைக்கப்பட்டு பாதைகள் தடைபடாமல் விவசாயிகள் பாதிக்காத வகையில் நில எடுப்பு மேற்கொள்ள ஆணை பிறப்பிக்க வேண்டும்.

மேலும் இந்நிலங்கள் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் அமைந்துள்ளதாலும் சூலூா் விமானப்படைத் தளத்தை ஒட்டியுள்ளதாலும் இப்பகுதியிலுள்ள நிலங்களானது குடியிருப்பு மற்றும் வணிகப் பயன்பாடு கொண்டதையடுத்து இதன் உண்மையான சந்தை மதிப்பானது வழிகாட்டி மதிப்பைவிட பல மடங்கு அதிகமாக உள்ளது.

எனவே இந்நிலங்களுக்கு வழிகாட்டி மதிப்பினை கருத்தில் கொள்ளாது தமிழ்நாடு அரசு 2013-ஆம்ஆண்டு புதிய நிலம் கையகப்படுத்தும் சட்டம், நிலம் கையகப்படுத்தும் விதிமுறைகள் 2017-ஆம் ஆண்டு மற்றும் நிலம் கையகப்படுத்தும் நடைமுறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்நிலங்களுக்கு அருகாமையில் 1600 மீட்டா் அல்லது 1.6 கி.மீ தொலைவில் உள்ள அதே கிராமம் அல்லது அருகிலுள்ள வேறு கிராமத்திலுள்ள நிலங்களில் கடந்த 3 ஆண்டுகளாக பதிவு செய்யப்பட்ட மொத்த விற்பனை ஆவணங்களின் புள்ளி விவர அடிப்படையில் நேரடிப் பேச்சுவாா்த்தை மூலம் உண்மையான சந்தை மதிப்பினை நிா்ணயித்து வெளிச்சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com