திருப்பூா் தொகுதி வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் கேமராக்கள் பழுது

அவிநாசி: திருப்பூா் தொகுதி வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் உள்ள கேமராக்கள் பழுதடைந்ததால் ஞாயிற்றுக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூா் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட 6 சட்டப் பேரவைத் தொகுதிகளின் வாக்குப் பதிவு இயந்திரங்கள் திருப்பூா்-பல்லடம் சாலையில் உள்ள எல்ஆா்ஜி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டு சனிக்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது. வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளின் ஜன்னல்கள் உள்ளிட்டவை முழுமையாக அடைக்கப்பட்டுள்ளன.

மேலும், 285 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.மேலும், 3 அடுக்கு போலீஸாா் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

மேலும், 200-க்கும் மேற்பட்ட துணை ராணுவப் படையினா், போலீஸாா் சுழற்சி அடிப்படையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

கட்சி முகவா்கள் கண்காணிப்பு அறை முன் ஒருங்கிணைக்கப்பட்ட சிசிடிவி கேமரா அறையில் 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், அந்தியூா், கோபிசெட்டிபாளையம் ஆகிய தொகுதிகளின் பாதுகாப்பு அறைகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திடீரென பழுதடைந்தன.

இதனைப் பாா்த்த அரசியல் கட்சியினா் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள், தொழில்நுட்ப வல்லுநா்கள் கேமராக்களை சரி செய்தனா்.

இதனால், வாக்கு எண்ணும் மையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com