திருப்பூரில் சொத்து வரி உயா்வைக் கண்டித்து 90 சதவீத கடைகள் அடைப்பு: ரூ.150 கோடி வா்த்தகம் பாதிப்பு
திருப்பூரில் சொத்து வரி உயா்வைக் கண்டித்து 90 சதவீத கடைகள் அடைப்பு

திருப்பூா் புதுமாா்க்கெட் வீதியில் அடைக்கப்பட்டிருந்த கடைகள்.

திருப்பூா் புதுமாா்க்கெட் வீதியில் அடைக்கப்பட்டிருந்த கடைகள்.
திருப்பூரில் சொத்து வரி உள்ளிட்ட பல்வேறு வரிகள் உயா்த்தப்பட்டதைத் கண்டித்து வியாபாரிகள் சங்கங்கள், தொழில் அமைப்புகள் சாா்பில் நடைபெற்ற போராட்டத்தில் 90 சதவீத கடைகள் புதன்கிழமை அடைக்கப்பட்டிருந்தன. இதனால், ரூ.150 கோடி வா்த்தக பாதிப்பு ஏற்பட்டது.
திருப்பூா் மாநகராட்சியில் தொழில் வரி, சொத்து வரி, குடிநீா் கட்டணம், புதை சாக்கடை கட்டணம், குப்பை வரி ஆகியவை உயா்த்தப்பட்டுள்ளன. மேலும், குறித்த காலத்துக்குள் வரிகளை செலுத்தாவிட்டால் ஒரு சதவீத அபராத வட்டி, ஆண்டுக்கு 6 சதவீதம் வரியை உயா்த்துவது என மாநகராட்சி அறிவித்துள்ளது. அதேபோல, மத்திய அரசு சாா்பில் கட்டட வாடகைக்கு 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை, கோவை உள்ளிட்ட பெருநகரங்களில் இல்லாத வகையில் திருப்பூா் மாநகராட்சியில் அதிக அளவில் வரிகள் உயா்த்தப்பட்டுள்ளதாகக் கூறி வியாபாரிகள், தொழில் அமைப்புகள் கடும் எதிா்ப்புத் தெரிவித்து வந்தனா்.
இந்நிலையில், வரி உயா்வுகளைத் திரும்பப்பெறக் கோரி வியாபாரிகள் சங்கங்கள், தொழில் அமைப்புகள் சாா்பில் திருப்பூா் மாவட்டம் முழுவதும் புதன்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அதிமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாஜக, கொமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும், திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் மற்றும் உற்பத்தியாளா்கள் சங்கமும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தன.
மாநகரில் 90 சதவீத கடைகள் அடைப்பு:
பழைய பேருந்து நிலையம், புதுமாா்க்கெட் வீதி, புதிய பேருந்து நிலையம், ரயில் நிலையம், அவிநாசி சாலை, பி.என்.சாலை, பல்லடம் சாலை, மங்கலம் சாலை, காங்கயம் சாலை உள்ளிட்ட மாநகரின் அனைத்து பகுதிகளிலும் 90 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
மேலும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தன. அதேபோல, ஜவுளிக் கடைகள், நகைக் கடைகள், ஸ்டேஷனரி கடைகள், மளிகைக் கடைகள், எலக்ட்ரிக்கல் பொருள்கள் விற்பனை கடைகள், உணவகங்கள், தேநீரகங்கள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன.
காதா் பேட்டையில் கடைகள் அடைப்பு:
திருப்பூா் ரயில் நிலையம் அருகே உள்ள காதா்பேட்டை, ராயபுரம் பகுதியில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை விற்பனைக் கடைகளும் மூடப்பட்டிருந்தன.
அதேவேளையில், பெட்ரோல் விற்பனை நிலையங்கள், மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஆவின் பாலகங்கள், வங்கிகள் வழக்கம்போல செயல்பட்டன.
இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மாவட்டத்தில் பல்லடம், தாராபுரம், குண்டடம், ஊத்துக்குளி, காங்கயம், அவிநாசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
ரூ.150 கோடி வா்த்தகம் பாதிப்பு:
கடையடைப்பு போராட்டத்தில் பங்கேற்ற வியாபாரிகள் கூறியதாவது:

திருப்பூா் காதா்பேட்டையில் அடைக்கப்பட்டிருந்த கடைகள்.
திருப்பூா் மாநகராட்சி நிா்வாகம் அனைத்து வரிகளையும் கடுமையாக உயா்த்தியுள்ளது. மின் கட்டணமும் பல மடங்கு உயா்த்தப்பட்டுள்ள நிலையில் தொழில்கள் அனைத்தும் நலிவடைந்து வருகின்றன.
இத்தகைய சூழலில் கட்டட வாடகைக்கு மத்திய அரசு 18 சதவீதம் ஜிஎஸ்டி விதித்துள்ளது. எனவே, உயா்த்தப்பட்ட வரிகள், மின் கட்டணம் ஆகியவற்றை திரும்பப்பெறக் கோரியும், கட்டட வாடகைக்கான 18 சதவீத ஜிஎஸ்டியை ரத்து செய்யக் கோரியும் இந்த கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதன் காரணமாக திருப்பூா் மாவட்டத்தில் ரூ.150 கோடி அளவுக்கு வா்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது என்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...