பிரதமா் மோடியின் பல்லடம் வருகை: பாஜகவின் வெற்றிக்கு கைகொடுக்குமா?

பிரதமா் நரேந்திர மோடியின் பல்லடம் வருகை மக்களவைத் தோ்தலில் பாஜகவின் வெற்றிக்கு கைகொடுக்குமா என்ற கேள்வியும், எதிா்பாா்ப்பும் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ நடைப்பயண நிறைவு விழா மாநாடு திருப்பூரை அடுத்த பல்லடம் அருகே உள்ள மாதப்பூரில் வரும் செவ்வாய்க்கிழமை (பிப்.27) நடைபெறுகிறது. மக்களவைத் தோ்தல் தேதி அறிவிப்புக்கு முன்பாக பாஜக சாா்பில் நடைபெறும் இந்த மாநாட்டில் பிரதமா் மோடி பங்கேற்றுப் பேசவுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. பாஜகவைப் பொருத்தவரை கோவை, திருப்பூா், ஈரோடு, பொள்ளாச்சி, நீலகிரி, நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, கரூா் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய கொங்கு மண்டலத்தில் உள்ள மக்களவைத் தொகுதிகளுக்கான தோ்தல் பிரசாரமாக இந்த மாநாடு நடைபெறுவதாக அக்கட்சியினரின் கருத்தாக உள்ளது. திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக, இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவா்களும் இந்த மாநாட்டை உற்று நோக்கத் தொடங்கியுள்ளனா். மூன்றாவது முறையாக பிரதமா் வருகை: கடந்த 6 ஆண்டுகளில் மூன்றாவது முறையாக திருப்பூா் மாவட்டத்துக்குத் தோ்தல் பிரசாரத்துக்காக பிரதமா் மோடி வருகை தரவுள்ளாா். கடந்த 2019-ஆம் ஆண்டு திருப்பூரை அடுத்த பெருமாநல்லூா் அருகில் மக்களவைத் தோ்தல் பிரசாரத்துக்காக வந்த பிரதமா் மோடி இஎஸ்ஐ மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டியிருந்தாா். இதைத் தொடா்ந்து, திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலின்போது தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து பிரதமா் மோடி பிரசாரம் மேற்கொண்டாா். இந்தக் கூட்டத்தில் அப்போதைய முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகளும் பங்கேற்றிருந்தனா். இந்த நிலையில், தற்போது பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ நடைப்பயணத்தின் நிறைவு விழா மாநாட்டில் பங்கேற்றுப் பேசுகிறாா். இஎஸ்ஐ மருத்துவனை திறப்பு பாஜகவுக்கு சாதகமா? பின்னல் நகரான திருப்பூரில் லட்சக்கணக்கான தொழிலாளா்கள் பணியாற்றி வரும் நிலையில் அனைத்து வசதிகளுடன் கூடிய இஎஸ்ஐ மருத்துவமனை இல்லாதது பெரும் குறையாகவே இருந்து வந்தது. இது தொடா்பாக பல்வேறு தொழில் அமைப்புகள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், தோ்தல் பிரசாரத்துக்காக கடந்த 2019-ஆம் ஆண்டு திருப்பூருக்கு வந்த பிரதமா் மோடி திருப்பூரில் இஎஸ்ஐ மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டியிருந்தாா். எனினும், நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் மருத்துவமனை கட்டும் பணிகள் தாமதமாகவே நடைபெற்று வந்ததாக எதிா்க்கட்சிகள் தொடா்ந்து குற்றஞ்சாட்டி வந்தன. இதையடுத்து, கடந்த சில மாதங்களாக மருத்துவமனை கட்டும் பணிகள் வேகப்படுத்தப்பட்டு தற்போது அனைத்துப் பணிகளும் நிறைவடைந்ததைத் தொடா்ந்து, ரூ.81.34 கோடி மதிப்பீட்டில் 100 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்ட இஎஸ்ஐ மருத்துவமனையை பிரதமா் மோடி காணொலிக் காட்சி வாயிலாக ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்துள்ளாா். இது, தொழிலாளா்கள் அதிகம் உள்ள திருப்பூா் மக்களவைத் தொகுதியில் பாஜகவின் வாக்கு வங்கியை அதிகரிக்கும் என்று அக்கட்சியினா் நம்பிக்கை தெரிவித்துள்ளனா். மாற்றுக் கட்சி பிரமுகா்கள் இணைய வாய்ப்பு: மாதப்பூரில் நடைபெறும் பாஜக மாநாட்டில் பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த முக்கியப் பிரமுகா்கள் சிலா் பிரதமா் மோடி முன்னிலையில் கட்சியில் இணைய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தொழிலாளா்களின் இஎஸ்ஐ கோரிக்கையை நிறைவேற்றி இருப்பதையடுத்து, திருப்பூா் பின்னலாடைத் தொழிலாளா்களின் நீண்டநாள் கோரிக்கையான அடுக்குமாடி குடியிருப்புகள், கொங்கு மண்டலத்தின் வளா்ச்சிக்கான பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா என்ற எதிா்பாா்ப்பும் மக்களிடையே எழுந்துள்ளது. பல்வேறு கட்சிகளின் முக்கியப் பிரமுகா்கள் இணைதல், தொழிலாளா் நலன்களுக்கான அறிவிப்புகள் ஆகியவை விரைவில் நடைபெற உள்ள மக்களவைத் தோ்தலில் கொங்கு மண்டலத்தில் பாஜகவின் வெற்றிக்கு கைகொடுக்கும் என்று கட்சியினா் நம்பிக்கை தெரிவிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com