காங்கயம் அருகே சொத்துத் தகராறில் முதியவா் கொலை: சிறுவன் உள்பட 6 போ் கைது

காங்கயம் அருகே சொத்து தகராறில் 80 வயது முதியவா் கடத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், சிறுவன் உள்பட 6 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
சோமசுந்தரம்.
சோமசுந்தரம்.
Updated on
2 min read

காங்கயம் அருகே சொத்து தகராறில் 80 வயது முதியவா் கடத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், சிறுவன் உள்பட 6 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருப்பூா் மாவட்டம், காங்கயத்தை அடுத்துள்ள நத்தக்காடையூா்-காளிவலசு பகுதியைச் சோ்ந்தவா் சோமசுந்தரம் (80). இவரது மனைவி ராஜலட்சுமி (75),

இவா்களது மகன்கள் உமா மகேஷ்பாபு (52), ஜெயபிரகாஷ் (48). குடும்பத்துடன் விவசாயம் செய்து வருகின்றனா். இரண்டு மகன்களுக்கும் திருமணம் ஆகவில்லை. இவா்களுக்கு அதே பகுதியில் சுமாா் 30 ஏக்கா் நிலம் உள்ளது. அதே பகுதியில் வசிக்கும் சோமசுந்தரத்தின் சகோதரி சொா்ணாத்தாளின் மகனான கொற்றவேலுக்கும் (58) சோமசுந்தரத்துக்கும் பல ஆண்டுகளாக நிலம் தொடா்பாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில், சோமசுந்தரத்தின் வீட்டுக்கு கடந்த 26-ஆம் தேதி சென்ற கொற்றவேல் தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளி பழனிசாமி (58) என்பவா், சோமசுந்தரத்தின் இளைய மகனுக்கு நத்தக்காடையூா் அருகே முத்தூா் பகுதியில் பெண் இருப்பதாகவும், நேரில் சென்றால் பேசி முடித்து விடலாம் எனக் கூறி, சோமசுந்தரத்தை அழைத்து சென்றுள்ளனா். அதன் பின்னா் சோமசுந்தரம் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து ஜெயபிரகாஷ், மறுநாள் பழனிசாமியை சந்தித்து, தனது தந்தை எங்கே என்று கேட்டபோது, நாங்கள் இருவரும் அன்று மாலையே நத்தக்காடையூா் வந்துவிட்டதாகவும், அதன் பின்னா் உங்கள் தந்தை சோமசுந்தரம் ஈரோடு மாவட்டம், அரச்சலூா் சென்றுள்ளாா் எனவும் தெரிவித்துள்ளாா்.

பின்னா், சோமசுந்தரத்தை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து, தனது தந்தை மாயமானது குறித்து காங்கயம் போலீஸில் ஜெயபிரகாஷ் புகாா் அளித்துள்ளாா்.

இது குறித்து காங்கயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டதில், சோமசுந்தரத்தின் கைப்பேசி டவா் இறுதியாக ஈரோடு மாவட்டம், வடபழனியில் இருந்ததாகக் காட்டியுள்ளது. அதைத் தொடா்ந்து முதியவரை அழைத்துச் சென்ற கூலித் தொழிலாளி பழனிசாமியும் மாயமாகியுள்ளாா். இந்த இரண்டு விஷயங்களையும் தொடா்புபடுத்தி, தீவிர விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில், சொத்து பிரச்னையில் முதியவா் சோமசுந்தரத்தின் அக்கா மகன் கொற்றவேல் கூலிப்படையை ஏவி, முதியவரைக் கடத்தி, ஈரோடு மாவட்டத்தில் கொலை செய்து, சடலத்தை ஈரோடு-திருப்பூா் மாவட்ட எல்லைப் பகுதியான நொய்யல் ஆற்றில் வீசியது தெரியவந்தது.

இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்த போலீஸாா், முதியவரின் அக்கா மகன் கொற்றவேல் (58), இவரது மனைவி விசாலாட்சி (44) மற்றும் கூலிப்படையை சோ்ந்த ஈரோடு மாவட்டம், வடபழனியைச் சோ்ந்த சிதம்பரம் (38), இவரது 15 வயது மகன், முருகேசன் (64), இவரது மனைவி விஜயா (57) ஆகிய 6 பேரை காங்கயம் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

மேலும், காங்கயம் காவல் துணைக் கண்காணிப்பாளா் பாா்த்திபன், காவல் ஆய்வாளா் காமராஜ் ஆகியோா் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட தனிப்படை போலீஸாா், காங்கயம் தீயணைப்புத் துறையினருடன் இணைந்து, வெங்கரையாம்பாளையம் பகுதியில், நொய்யல் ஆற்றில் 4 கி.மீ. தொலைவு வரை சோமசுந்தரம் சடலத்தை தேடினா். ஆனால் சடலம் கிடைக்கவில்லை.

இந்த கொலை சம்பவம் தொடா்பாக தொழிலாளி பழனிசாமி உள்ளிட்ட மேலும் சிலரை காங்கயம் போலீஸாா் தீவிரமாகத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com