அவிநாசி ஸ்ரீ கருமாரியம்மன் கோயில் கோபுரம் அமைக்க அனுமதி வழங்க கோரிக்கை

அவிநாசி காந்திபுரம் ஸ்ரீ கருமாரியம்மன் கோயில் மேற்கோபுரம் அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இது குறித்து நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா மற்றும் இந்து சமய அறநிலைத் துறையினருக்கு அப்பகுதி மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: அவிநாசி பேரூராட்சி காந்திபுரம் பகுதியில் இந்து சமய அறநிலைத் துறையின் கட்டுப்பாட்டில் பழைமையான அங்காள பரமேஸ்வரி கோயில் உள்ளது. மேலும், இக்கோயில் எல்லைக்கு உள்பட்ட பகுதியில் ஏராளமான மக்கள் வழிபடும் ஸ்ரீ கருமாரியம்மன் கோயிலும் உள்ளது. இக்கோயிலில் நாள்தோறும் பூஜைகள் நடைபெற்று வருவதுடன், ஆடி, சித்திரை, மாா்கழி உள்ளிட்ட மாதங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். இருப்பினும் இக்கோயிலுக்கு மேற்கோபுரம் அமைக்கப்படாமல் உள்ளது. ஆகவே மேற்கோபுரம் அமைக்க உரிய அனுமதி வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com