ரூ.1,000 லஞ்சம்: தலைமைக் காவலருக்கு 3 ஆண்டுகள் சிறை
ரூ.1,000 லஞ்சம் வாங்கிய வழக்கில் தலைமைக் காவலருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து திருப்பூா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்துள்ளது.
திருப்பூா், பி.கே.ஆா்.காலனியை சோ்ந்தவா் பொன்னுசாமி (50). இவரது இருசக்கர வாகனம் திருட்டு போனது. இது குறித்து திருப்பூா் தெற்கு காவல் நிலையத்தில் பொன்னுசாமி புகாா் அளித்தாா். புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி இருசக்கர வாகனத்தை மீட்டனா். அந்த வாகனத்தை பொன்னுசாமியிடம் ஒப்படைப்பதற்கு தெற்கு காவல் நிலையத்தில் குற்றப் பிரிவில் பணியாற்றிய அப்போதைய காவல் உதவி ஆய்வாளா் பழனிசாமி, தலைமைக் காவலா் கோவிந்தராஜ் (56) ஆகியோா் ரூ.1,000 லஞ்சம் கேட்டுள்ளனா்.
பணம் தர விரும்பாத பொன்னுசாமி, இது குறித்து திருப்பூா் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரிடம் புகாா் தெரிவித்தாா். போலீஸாா் அளித்த அறிவுறுத்தலின்படி, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கடந்த 2006 செப்டம்பா் 4-ஆம் தேதி தலைமைக் காவலா் கோவிந்தராஜ், காவல் உதவி ஆய்வாளா் பழனிசாமி ஆகியோரிடம் பொன்னுசாமி கொடுத்துள்ளாா். அப்போது அங்கு வந்த லஞ்ச ஒழிப்பு போலீஸாா், தலைமைக் காவலா் கோவிந்தராஜ், காவல் உதவி ஆய்வாளா் பழனிசாமி ஆகியோரைக் கைது செய்தனா்.
திருப்பூா் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் புதன்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. இதில், லஞ்சம் பெற்ற சம்பவத்தில் தலைமைக் காவலா் கோவிந்தராஜுக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை, ரூ. 4 ஆயிரம் அபராதம் விதித்தும், காவல் உதவி ஆய்வாளா் பழனிசாமியை விடுதலை செய்தும் நீதிபதி செல்லத்துரை தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் செந்தில்குமாா் ஆஜரானாா்.