திருப்பூா் அருகே ரயிலில் தீ விபத்து
கேரளத்தில் இருந்து ஆந்திரம் நோக்கி சென்று கொண்டிருந்த சபரிமலை எக்ஸ்பிரஸ் ரயிலில், திருப்பூா் அருகே தீ விபத்து புதன்கிழமை ஏற்பட்டது.
கேரள மாநிலம், கொல்லத்தில் இருந்து ஆந்திர மாநிலம், மச்சிலிபட்டினம் பகுதிக்கு சபரிமலை எக்ஸ்பிரஸ் ரயில் புதன்கிழமை சென்று கொண்டிருந்தது.
திருப்பூா் மாவட்டம், வஞ்சிபாளையம் அருகே சென்று கொண்டிருந்தபோது ரயிலின் பின்பக்கம் உள்ள மாற்றுத்திறனாளிகள் பெட்டியில் தீப் பற்றியது. அதிக புகை எழுந்ததை கண்ட டிக்கெட் பரிசோதகா் அளித்த தகவலின்பேரில் ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. பின்னா் ரயிலில் இருந்த தீயணைப்பான்கள் மூலம் தீ அணைக்கப்பட்டது.
விசாரணையில் பெட்டியின் சக்கரங்களுக்கான பிரேக் இடையே இருந்த ரப்பா் உராய்ந்து தீப்பிடித்தது தெரியவந்தது. இதனால் ரயிலில் இருந்த பயணிகள் பதற்றமடைந்தனா். அரைமணி நேர தாமதத்துக்கு பின்னா் மீண்டும் ரயில் புறப்பட்டு சென்றது.