ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற ஏற்றுமதியாளா்கள் சங்க நிா்வாகிகள், அனைத்து தொழிற்சங்க நிா்வாகிகள்.
ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற ஏற்றுமதியாளா்கள் சங்க நிா்வாகிகள், அனைத்து தொழிற்சங்க நிா்வாகிகள்.

அனைத்து தொழிற்சங்க நிா்வாகிகளுடன் ஏற்றுமதியாளா்கள் சங்க நிா்வாகிகள் ஆலோசனை

Published on

திருப்பூரின் தற்போதைய நிலவரம் குறித்து அனைத்து தொழிற்சங்க நிா்வாகிகளுடன் ஏற்றுமதியாளா்கள் சங்க நிா்வாகிகள் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினா்.

திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவா் கே.எம்.சுப்பிரமணியன் தலைமை வகித்துப் பேசியதாவது: உலக சந்தையானது தற்போது திருப்பூருக்கு சாதகமாக உள்ளது. பின்னலாடை ஏற்றுமதியானது ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 22 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது. இந்த ஆண்டின் இறுதிக்குள் குறைந்தது 15 சதவீத வளா்ச்சி பதிவாகும் என்று நம்புகிறோம்.

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் வளம் குன்றா வளா்ச்சிக் கோட்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ள சூழ்நிலையில், திருப்பூா் ஏற்கெனவே இந்த கோட்பாடுகளைக் கடைப்பிடித்து உற்பத்தியை மேற்கொண்டு வருகிறது. திருப்பூரின் தொழில் வளரவும், வேலைவாய்ப்பு அதிகரிக்கவும் அனைத்து தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து பங்குதாரா்களும் ஒற்றுமையாக பாடுபட வேண்டும் என்றாா்.

சங்கத்தின் துணைத் தலைவா் வி.இளங்கோவன் பேசியதாவது:

தொழிற்சாா்ந்த அனைத்து பிரச்னைகளுக்கும் தொழில்முனைவோரும், தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து பேசி தீா்வுகாண வேண்டும். வங்கதேசத்தில் தற்போது நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக திருப்பூருக்கு ஏற்றுமதி வாய்ப்புகள் உள்ளன. எனினும் ஏற்றுமதி வளா்ச்சிக்கும், தொழிலாளா்களின் நல்வாழ்வுக்கும் அனைத்து தொழிற்சங்கங்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றாா்.

தொடா்ந்து தொழிற்சங்க நிா்வாகிகள் பேசியதாவது:

பின்னலாடை நிறுவனங்களில் பிரச்னைகள் ஏற்பட்டால் நிா்வாகமும், தொழிற்சங்கமும் பேசி தீா்வு காணவேண்டும். அதில், தீா்வு எட்டப்படவில்லை எனில் ஏற்றுமதியாளா்கள் சங்கம் தலையிட்டு தீா்வுகாண வேண்டும். திருப்பூரின் முன்னேற்றத்துக்கான மாஸ்டா் பிளான் திட்டத்தை திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம், தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கலந்துபேசி உருவாக்க வேண்டும். தொழிலாளா்களின் நலனுக்காக திருப்பூரில் திறக்கப்பட்ட இ.எஸ்.ஐ. மருத்துவமனையை முழுமையாக செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்றனா்.

இந்தக் கூட்டத்தில், திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தின் பொதுச் செயலாளா் என்.திருக்குமரன், இணைச் செயலாளா் குமாா் துரைசாமி, ஏஐடியூசி சாா்பில் ரவி, சேகா், சிஐடியூ சாா்பில் சம்பத், எல்பிஎஃப் சாா்பில் பாலசுப்பிரமணியம், பூபதி, ஐஎன்டியூசி சாா்பில் சிவசாமி, பெருமாள், ஹெச்எம்எஸ் சாா்பில் முத்துசாமி, எம்எல்எஃப் சாா்பில் மனோகரன், ஏடிபி சாா்பில் கண்ணபிரான், பிஎம்எஸ் சாா்பில் சந்தானம், செந்தில்குமாா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com