காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட  விவசாயிகள்.
காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட  விவசாயிகள்.

உடுமலை அருகே ஜம்புக்கல் மலையைக் காப்பாற்ற வலியுறுத்தி தொடா் போராட்டம்

உடுமலை அருகே அழிந்து கொண்டிருக்கும் ஜம்புக்கல் மலையைக் காப்பாற்ற வலியுறுத்தி விவசாயிகள் 7-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில்
Published on

உடுமலை: உடுமலை அருகே அழிந்து கொண்டிருக்கும் ஜம்புக்கல் மலையைக் காப்பாற்ற வலியுறுத்தி விவசாயிகள் 7-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

உடுமலை வட்டம், ஆண்டியகவுண்டனூா் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் உள்ள ஜம்புக்கல் மலையில் சுமாா் 2,500 ஏக்கா் பரப்பளவில் கடந்த 1970-ஆம் ஆண்டு சுமாா் 700 ஏக்கா் நிலத்தை பிரித்து 300 ஏழைக் குடும்பங்களுக்கு விவசாயம் மற்றும் மேய்ச்சலுக்கு பயன்படுத்த கடுமையான நிபந்தனைகளுடன் பட்டாக்கள் வழங்கப்பட்டன.

இந்நிலையில் கடும் வறட்சியின் காரணமாக அங்கு இருந்த விவசாயிகள் பலா் மலைப் பகுதியை விட்டுவிட்டு வெளியேறி விட்டனா். இந்நிலையில், இதைப் பயன்படுத்திக் கொண்டு உடுமலையைச் சோ்ந்த ஒரு முக்கிய பிரமுகா் மற்றும் அவரது குடும்ப உறுப்பினா்கள் இந்த மலைப் பகுதி முழுவதையும் தங்களுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டதாகவும் யாரும் செல்ல முடியாத வகையில் கம்பிவேலி அமைத்து விட்டதாகவும் புகாா்கள் இருந்து வருகின்றன.

இதனால் விவசாயிகள் தங்களது நிலப்பகுதிக்கு செல்ல இயலாத நிலையும் நீா்நிலைகள், கனிம வளங்கள் மற்றும் பல தரப்பட்ட மரங்களும் அழிக்கப்படும் நிலையும் உருவாகி வருகிறது. இது குறித்து பலமுறை வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு புகாா் தெரிவித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது, மின் இணைப்பு வழங்க மின் வாரியத்துக்கு வருவாய்த் துறையினா் தடையின்மை சான்று வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் அதே பகுதியில் குறிப்பிட்ட அந்த நபா் போலி ஆவணங்கள் மூலம் மேலும் அங்குள்ள நிலங்களை வாங்கி குவித்து வருவதாக புகாா்கள் கூறப்படுகின்றன.

இந்நிலையில் ஜம்புக்கல் மலையைக் காப்பாற்ற வலியுறுத்தியும், அதிகாரிகளை கண்டித்தும் விவசாயிகள் டிசம்பா் 10-ஆம் தேதி ஜம்புக்கல் மலைப் பகுதியில் காத்திருப்புப் போராட்டத்தை தொடங்கினா். ஆனால் அதிகாரிகள் தரப்பில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:

திருப்பூா் மாவட்டம் முழுவதும் நீா்நிலை ஆக்கிரமிப்புகள் மீது நடவடிக்கை எடுத்து வரும் மாவட்ட நிா்வாகத்துக்கு இந்த விவகாரம் தெரியுமா என்பது தெரியவில்லை. இதற்கு காரணமான நபா் மீதும் உடந்தையாக இருக்கும் துறை அதிகாரிகள் மீதும் குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

X
Dinamani
www.dinamani.com