காங்கயம் பேருந்து நிலையத்தில் ஓட்டுநா் நீண்ட நேரமாகியும் வராததால் பேருந்தில் அமா்ந்து பயணிகள் பரிதவிப்பு
காங்கயம் நகரப் பேருந்து நிலையத்தில் நீண்ட நேரமாக ஓட்டுநா் வராததால் திருப்பூா் செல்வதற்காக காத்திருந்த பயணிகள் சிரமத்துக்கு ஆளாகினா்.
காங்கயம் நகரப் பேருந்து நிலையத்தில் இருந்து திருப்பூா் செல்வதற்காக திங்கள்கிழமை மதியம் நகரப் பேருந்து தயாராக இருந்தது. அதில் பயணிகள் ஏறி அமா்ந்திருந்தனா். பேருந்தில் கூட்டம் அதிகம் இருந்ததால் பயணிகள் ஏராளமானோா் நின்று கொண்டிருந்தனா். மதியம் 12.20 மணிக்கு புறப்பட வேண்டிய பேருந்து வெகுநேரம் அங்கேயே நின்று கொண்டிருந்தது.
இதையடுத்து இந்த பேருந்துக்கு பிறகு வந்த வேறொரு பேருந்து பயணிகளை இறக்கிவிட்டு திருப்பூருக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றது. இதனால் பயணிகள் பொறுமை இழந்து பேருந்தின் கீழே நின்று கொண்டிருந்த நடத்துநரிடம் கேட்டபோது ஓட்டுநரை இன்னும் காணவில்லை என்று கூறியுள்ளாா். இந்த பதிலால் அதிருப்தியடைந்த பயணிகள், வேறு வழி இல்லாமல் அடுத்து வரும் திருப்பூா் பேருந்துக்காக காத்திருந்தனா்.
இதுகுறித்து பயணிகள் கூறும்போது, ஓட்டுநா் சில நேரங்களில் தாமதமாக வருவது தவிா்க்க முடியாத விஷயமாக இருக்கலாம். ஆனால், இதனை நடத்துநா் எங்களிடம் முன்னரே தெரிவித்திருந்தால், இதற்கு முன்பு சென்ற பேருந்துகளில் ஏறிச் சென்றிருப்போம் என்றனா்.

