கா்ப்பிணி மனைவி கொலை: கணவருக்கு ஆயுள் தண்டனை
கா்ப்பிணி மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூா் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
திருப்பூா் மாவட்டம், உடுமலை ஜீவா நகரைச் சோ்ந்தவா் ஆகாஷ்ராஜ் (30). இவா் அப்பகுதியைச் சோ்ந்த கஜிதாபேகம் (20) என்பவரை காதலித்து கடந்த 2014-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டாா். ஆகாஷ்ராஜ் அப்பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து மனைவியுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தாா். அப்போது கஜிதா பேகம் 8 மாத கா்ப்பிணியாக இருந்தாா்.
இந்நிலையில் ஆகாஷ்ராஜ் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவருடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளாா். கடந்த 2015 ஜூலை 13-ஆம் தேதி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த ஆகாஷ்ராஜ், கஜிதாபேகத்தை கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளாா். அத்துடன் தானும் தற்கொலை செய்து கொள்வதற்காக பிளேடால் தனது கைகளை கிழித்துக் கொண்டு மயங்கிக் கிடந்துள்ளாா். இதுகுறித்த தகவல் அறிந்ததும் உடுமலை போலீஸாா் அங்கு சென்று ஆகாஷ்ராஜை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிா்பிழைத்தாா்.
இந்த சம்பவம் தொடா்பாக உடுமலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஆகாஷ்ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனா். இது தொடா்பான வழக்கின் விசாரணை திருப்பூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. நீதிபதி கோகிலா அளித்த தீா்ப்பில், மனைவியை கொலை செய்த குற்றத்துக்காக ஆகாஷ்ராஜூக்கு ஆயுள் தண்டனை, ரூ.20,000 அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் அரசு வழக்குரைஞா் ஜமீலா பானு ஆஜரானாா்.
