பல்லடம் அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் பிரிவு தொடக்கம்
பல்லடம்: பல்லடம் அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் பிரிவை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.
பல்லடம் அரசு மருத்துவமனையில் ரூ.55 லட்சம் மதிப்பிலான புதிய இரண்டு இயந்திரங்கள் கொண்ட டயாலிசிஸ் பிரிவு தொடக்க நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் மனீஷ் தலைமை வகித்தாா். பல்லடம் நகராட்சித் தலைவா் கவிதாமணி ராஜேந்திரகுமாா், மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் மருத்துவா் மீரா ஆகியோா் முன்னிலை வகித்தனா். பல்லடம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் ராமசாமி வரவேற்றாா். டயாலிசிஸ் பிரிவை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தொடங்கிவைத்தாா்.
அதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் கூறியதாவது: பல்லடம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளோடு வரக்கூடிய உதவியாளா்கள் காத்திருக்கக்கூடிய வகையில் அரங்கம், அவசர சிகிச்சைப் பிரிவு, விபத்து சிகிச்சைப் பிரிவு ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. பல்லடம் அரசு மருத்துவமனை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளதால் சாலை விபத்துகளுக்கு உடனடியாக சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் நடைபெற்ற விழாவில் அறிவித்ததை தொடா்ந்து, கூடுதல் கட்டடம் அமைக்கப்பட்டு வருகிறது.
ரூ.3 கோடி மதிப்பீட்டில் மகப்பேறு மருத்துவ வசதிக்காக கூடுதல் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. அவசர சிகிச்சை விபத்துப் பிரிவு மற்றும் விபத்து சிகிச்சைப் பிரிவுக்கான கட்டடம் ரூ.300 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது.
ஸ்கேன், டயாலிசிஸ் செய்யக்கூடிய இயந்திரம் தற்போது தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்களும் நிதி உதவி செய்திருக்கிறாா்கள் என்றாா்.
பல்லடம் அரசு மருத்துவமனை வளாகத்தில் பத்திரிகையாளா் நல வாரியத்தின் கீழ் செய்தியாளா் ஒருவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக ரூ.2.50 லட்சத்துக்கான காசோலை, மற்றொரு செய்தியாளரின் முதுகெலும்பு அறுவை சிகிச்சைக்காக ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில் பல்லடம் நகர திமுக செயலாளா் ராஜேந்திரகுமாா், மாவட்ட திமுக நெசவாளா் அணி முன்னாள் அமைப்பாளா் பி.சி.கோபால், மாவட்ட பொறியாளா் அணி முன்னாள் அமைப்பாளா் சிற்பி செல்வராஜ், மகாலட்சுமி நகா் இளங்கோ உள்பட பலா் கலந்து கொண்டனா்.

