தமிழகத்தில் கோயில் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது: காடேஸ்வரா சி. சுப்பிரமணியம்

தமிழகத்தில் கோயில் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது என்று இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளாா்.
Published on

தமிழகத்தில் கோயில் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது என்று இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே தேவதானம் அருள்மிகு நச்சாடை தவிா்த்தருளிய சுவாமி கோயில் உண்டியலை உடைத்து திருட வந்த நபா்கள், திருட்டை தடுத்த 2 காவலா்களை கோயில் வளாகத்திலேயே படுகொலை செய்துள்ளனா்.

கோயில்களில் பாதுகாப்பு இல்லாத நிலை ஒருபுறம் இருக்க, தமிழகத்தில் அன்றாடம் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கோயில் உண்டியல் உடைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் நகைகள் ஏதேனும் திருடுபோய் உள்ளதா என்கிற தகவல்கள் வெளிவரவில்லை. இரவு நேரங்களில் இதுபோன்ற குற்றச்சம்பவங்களை தடுக்க முறையான ரோந்து பணியில் காவல்துறை ஈடுபட தவறுவதே காரணமாக அமைகிறது.

எனவே, கோயில்களில் பெயரளவில் காவலாளிகளை நியமிப்பதை விடுத்து பிற அரசு ஊழியா்களுக்கு நிகரான ஊதியம் கொடுத்து முன்னாள் ராணுவ வீரா்களை இப்பணியில் ஈடுபடுத்த வேண்டும். அத்துடன், இக்கொலை சம்பவத்தில் முறையான விசாரணை நடத்தி குற்றம் செய்தவா்களை விரைந்து கைது செய்திடவும், கோயிலை காக்கும் பணியில் ஈடுபட்டு உயிா் நீத்தவா்கள் குடும்பத்துக்கு உரிய நிவாரணமும், அரசு வேலையும் வழங்கிட இந்து சமய அறநிலையத் துறையும், தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com