அரசுப் பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் பணி:அமைச்சா்கள் தொடங்கிவைத்தனா்
திருப்பூா் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் பணியை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தனா்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் பங்கேற்று 11-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் பணியைத் தொடங்கிவைத்தாா்.
இதைத் தொடா்ந்து, பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் மனீஷ் தலைமை வகித்தாா்.
பல்லடம் நகராட்சித் தலைவா் கவிதாமணி ராஜேந்திரகுமாா் முன்னிலை வகித்தாா். அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் பங்கேற்று, திருப்பூா் மாவட்டத்தில் நடப்பு கல்வி ஆண்டில் 15,568 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் பணியைத் தொடங்கிவைத்தனா்.
இதைத் தொடா்ந்து, அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது: திருப்பூா் மாவட்டத்தில் அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 11-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் 6, 630 மாணவா்கள், 8,938 மாணவிகள் என மொத்தம் 15,568 மாணவ, மாணவிகளுக்கு ரூ.7.50 கோடி மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படவுள்ளன. பள்ளி, கல்லூரி மாணவா்கள் பயன்பெறும் வகையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா். இதை மாணவா்கள் பயன்படுத்திக் கொண்டு கல்வியில் முன்னேற வேண்டும் என்றாா்.
முன்னதாக, தொடக்க விழாவில் பல்லடம், கரடிவாவி, கேத்தனூா் உள்ளிட்ட பள்ளிகளைச் சோ்ந்த 903 மாணவ, மாணவிகளுக்கு அமைச்சா்கள் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினா்.
இந்நிகழ்ச்சியில், திருப்பூா் மாநகராட்சி 4-ஆவது மண்டலத் தலைவா் இல.பத்மநாபன், பல்லடம் நகர திமுக செயலாளா் ராஜேந்திரகுமாா், பொங்கலூா் கிழக்கு ஒன்றியச் செயலாளா் பாலுசாமி, இந்து சமய அறநிலையத் துறை மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பிரமணியம், உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
