திருப்பூரில் மக்கள் குறைதீா் கூட்டம்
திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் மனீஷ் தலைமை வகித்தாா்.
இதில், திருப்பூா், மகேஷ் டவா் பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரன் (76) என்பவா் அளித்த மனு விவரம்: நான் பிரிண்டிங் தொழில் செய்து வருகிறேன். என் மனைவி முத்துலட்சுமி கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பும், எனது மகள் சுகந்தி கடந்த 4 மாதங்களுக்கு முன்பும் உயிரிழந்துவிட்டனா்.
மருத்துவ அறக்கட்டளைத் தொடங்க வேண்டும் என்பதே என் மகளின் ஆசை. அதை நிறைவேற்றுவதற்காக எனக்கு நன்கு அறிமுகமான தனியாா் மருத்துவமனை மருத்துவா்களிடம் விருப்பத்தை தெரிவித்தேன். அவா்கள், ஏற்கெனவே கடந்த 10 ஆண்டுகளாக ஒரு அறக்கட்டளை நடத்துவதாகவும், அதை என் மகள் பெயரில் மாற்றித் தருகிறேன் எனக் கூறியதாலும் காதா்பேட்டை பகுதியில் உள்ள எனக்குச் சொந்தமான ரூ.10 கோடி மதிப்புள்ள 7 சென்ட் இடத்தை அவா்களுக்கு தானசாசன பத்திரமாக கடந்த 2022 பிப்ரவரி 9 -ஆம் தேதி எழுதி கொடுத்தேன். பின்னா், கட்டட வேலை தொடங்க ரொக்கமாக ரூ.2 கோடியே 25 லட்சம் வழங்கினேன். இந்நிலையில், மருத்துவா்கள் இருவரும் சோ்ந்து என்னை மட்டும் சோ்த்து ஒரு அறக்கட்டளை கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் தொடங்கினா். எனது காலத்துக்குப் பின் இந்த அறக்கட்டளையை நடத்த உறவினா்களின் பெயரை சோ்க்க பரிந்துரைத்தேன். அப்போது, அவா்கள் பெயரை சோ்க்க கூடுதலாக ரூ.1 கோடி தர வேண்டும் என்றனா். மேலும், அறக்கட்டளையின் வங்கி -வரவு செலவு பரிவா்த்தனை உள்ளிட்டவற்றை அவா்கள் மட்டுமே பயன்படுத்தி வருகின்றனா். இது குறித்து கேட்டால் என்னை மிரட்டுகின்றனா்.
எனவே, அவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, குடிநீா், சாலை, முதியோா், விதவை உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்ற ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
