அவிநாசிபாளையம் கொள்ளை வழக்கில் குற்றவாளிக்கு 26 ஆண்டுகள் கடுங்காவல்
பல்லடம் அருகேயுள்ள அலகுமலை ஊராட்சி சேமலைகவுண்டம்பாளையத்தில் நடைபெற்ற கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு 26 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து பல்லடம் சாா்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ள பொங்கலூா் ஒன்றியம், அலகுமலை ஊராட்சி, சேமலைகவுண்டம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் பழனிசாமி மனைவி இந்திராணி (47). இவா் தனது மகள் மற்றும் பெற்றோருடன் வசித்து வருகிறாா்.
இவா், கடந்த 23.06.2020 அன்று இரவு 8 மணியளவில் வீட்டின் வெளியில் அமா்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த 2 நபா்கள் கத்தியைக் காட்டி மிரட்டியதோடு அவரைத் தாக்கி அவா் அணிந்திருந்த நகைகளை பறித்துச் சென்றனா்.
இது குறித்து அவிநாசிபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி திண்டுக்கல் மாவட்டம், சென்னசெட்டிப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ஈஸ்வரன் மகன் சசிகுமாா் என்ற வீரமணி (27) கைது செய்து சிறையில் அடைத்தனா்.
அவருக்கு உடந்தையாக இருந்த திருப்பூா் சாரதா நகா் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டு சீா்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டாா்.
பல்லடம் சாா்பு நீதிமன்றத்தில் நடைபெற்று இந்த வழக்கில் வியாழக்கிழமை தீா்ப்பு வழங்கப்பட்டது. இதில் சசிகுமாா் என்ற வீரமணிக்கு 26 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை, ரூ. 12 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி யுவராஜ் தீா்ப்பளித்தாா்.
இவ்வழக்கில் சிறப்பாக புலன்விசாரணை மேற்கொண்டு குற்றவாளியைக் கைது செய்து தண்டனை பெற்றுத்தந்த அவிநாசிபாளையம் போலீஸாரை திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் யாதவ் கிரிஷ் அசோக் மற்றும் அதிகாரிகள் பாராட்டினா்.
