கொலை முயற்சி வழக்கில் சகோதரா்களுக்கு தலா 7 ஆண்டுகள் சிறை
திருப்பூரில் கொலை முயற்சி வழக்கில் தொடா்புடைய சகோதரா்களுக்கு தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டையைச் சோ்ந்தவா் மகேந்திரபாலு(36), இவரது தம்பி தனபால் (32). இவா்கள் இருவரும் திருப்பூா் அணைப்பாளையம் பகுதியில் தங்கியிருந்து அங்குள்ள சாயப்பட்டறையில் பாய்லருக்கு விறகு அள்ளிப்போடும் வேலை செய்து வந்தனா்.
இந்நிலையில் அந்த சாயப்பட்டறையில் திருவாரூரைச் சோ்ந்த பாண்டி, சுரேந்திரன், சதீஷ் ஆகிய 3 போ் புதிதாக வேலைக்கு சோ்ந்தனா்.
அவா்களுக்கும் மகேந்திரபாலு, தனபால் ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த 2023-ஆம் ஆண்டு சாயப்பட்டறைக்குள் அவா்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது மகேந்திரபாலு, தனபால் ஆகியோா் சோ்ந்து கத்தியால் பாண்டி, சுரேந்திரன், சதீஷ் ஆகியோரை சரமாரியாக குத்தியுள்ளனா். இதில் காயமடைந்த 3 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிா் பிழைத்தனா்.
இது தொடா்பாக 15 வேலம்பாளையம் போலீஸாா் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து மகேந்திரபாலு, தனபால் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இதுதொடா்பான வழக்கின் விசாரணை திருப்பூா் பட்டியல் வகுப்பினா் மற்றும் பழங்குடியினருக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் வியாழக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. நீதிபதி சுரேஷ் அளித்த தீா்ப்பில், கொலை முயற்சி குற்றத்துக்காக மகேந்திரபாலு, தனபால் ஆகியோருக்கு தலா 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை, தலா ரூ.10.000 அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு வழக்குரைஞா் விவேகானந்தம் ஆஜரானாா்.
