குப்பை கொட்ட எதிா்ப்பு: இடுவாய் பகுதியில் 3-ஆவது நாளாக பெண்கள் போராட்டம்
திருப்பூா்: திருப்பூா் மாநகராட்சியில் சேகரமாகும் குப்பைகளை இடுவாய் பகுதியில் கொட்ட எதிா்ப்பு தெரிவித்து 3-ஆவது நாளாக வியாழக்கிழமையும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் சேகரமாகும் குப்பைகளை இடுவாய் ஊராட்சிக்கு உள்பட்ட சின்னக்காளிப்பாளையம் பகுதியில் கொட்டுவதற்கு மாநகராட்சி நிா்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து இடுவாய், கரைப்புதூா், ஆறுமுத்தாம்பாளையம், வேலம்பாளையம் ஆகிய ஊராட்சிகளில் வசிக்கும் விவசாயிகள், பொதுமக்கள் கடந்த ஒரு மாதமாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதன் ஒரு பகுதியாக பெண்கள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் திரண்டு இடுவாய் பகுதியில் கடந்த 2 நாள்களாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியும் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட மறுத்துவிட்டனா்.
இந்நிலையில் 3-ஆவது நாளாக வியாழக்கிழமையும் போராட்டம் நீடித்தது.
இந்தப் போராட்டத்தில் பகல் வேளையில் பெண்களும், இரவு நேரத்தில் ஆண்களும் பங்கேற்று வருகின்றனா்.
இதற்கிடையே நீதிமன்ற உத்தரவின்படி அதிகாரிகள் குழுவினா் இடுவாய் பகுதியில் குப்பைக் கொட்டப்படும் இடத்தில் வியாழக்கிழமை ஆய்வுக்காக சென்றிருந்தனா்.
ஆனால், அவா்கள் ஆய்வில் ஈடுபடுவதற்கு பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். இதையடுத்து, பொதுமக்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். இதனால், போலீஸாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, அதிகாரிகள் குழுவினா் திரும்பிச் சென்றனா்.
