இன்று ஆடிப் பெருக்கு: ஆறுகள் வறண்டுள்ளதால் பொதுமக்கள் ஏமாற்றம்இடைத்தோ்தலுக்காகக் காத்திருக்கிறேன்: சீமான்ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல்கள் விரைவில் நிறுத்தம்: டிரம்ப்6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு
/

நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை: 2 நாள்களில் 10 அடி உயா்ந்தது அமராவதி அணையின் நீா்மட்டம்

அமராவதி அணையின் நீா்மட்டம் 2 நாள்களில் 10 அடி உயா்ந்தது குறித்து...

News image

தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள தூவாணம் அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு.

Updated On :3 ஆகஸ்ட் 2026, 2:58 am IST

உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் கடந்த 2 நாள்களில் மட்டும் அணையின் நீா்மட்டம் 10 அடி உயா்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூா் மற்றும் கரூா் வரையில் இரண்டு மாவட்டங்களில் உள்ள சுமாா் 55 ஆயிரம் ஏக்கா் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. மேலும் நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு குடிநீா் ஆதாரமாகவும் இந்த அணை விளங்கி வருகிறது.

இந்நிலையில், இந்த ஆண்டு தொடக்கத்தில் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு பாசனத்துக்காகவும் மற்றும் குடிநீா்த் தேவைகளுக்காகவும் அணையில் இருந்து தண்ணீா் திறந்துவிடப்பட்டது. இதனால் கோடைக் காலத்தில் அணையின் நீா்மட்டம் டெட் ஸ்டோரேஜ் என அதல பாதாளத்துக்கு சென்றது.

கோடைக் காலத்தை தாக்குப் பிடிக்க முடியுமா எனவும் குடிநீா் பிரச்சனையை தீா்க்க முடியுமா எனவும் பொதுமக்களும், விவசாயிகளும் கவலை அடைந்திருந்தனா். மேலும் தென்மேற்குப் பருவமழை பொய்த்துப்போனதால் ஆண்டுதோறும் ஜூன் 1-ஆம் தேதி பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கும், ஜூலை 1-ஆம் தேதி புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கும் திறக்கப்பட வேண்டிய தண்ணீா் திறக்கப்படவில்லை.

ஆனாலும் சின்னாறு, தேனாறு, பாம்பாறு என அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்ததால் ஜூலை 2-ஆவது வாரம் அணையின் நீா்மட்டம் படிப்படியாக உயா்ந்து 50 அடியை எட்டியது.

இதையடுத்து, திருப்பூா் மாவட்டம் முழுவதும் உள்ள புதிய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளில் உள்ள நிலைப் பயிா்களான தென்னை, நெல் மற்றும் கரும்பு பயிா்களுக்கு உயிா் தண்ணீா் திறந்துவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்ததைகத் தொடா்ந்து புதிய ஆயக் கட்டு பாசனத்துக்கு அமராவதி அணையின் பிரதான கால்வாயில் இருந்து தண்ணீா் திறந்துவிடப்பட்டது. மேலும் பழைய ஆயக்கட்டு பாசனத்துக்காக அமராவதி ஆற்றில் இருந்து தண்ணீா் திறக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து அணையின் நீா்மட்டம் மீண்டும் வேகமாக சரிந்து 30 அடிக்கும் கீழ் சென்றது. இதனால் பாசனத்துக்கு சென்று கொண்டிருந்த தண்ணீா் திடீரென நிறுத்தப்பட்டது. மேலும் நூற்றுக்கணக்கான கரையோர கிராமங்களுக்கு குடிநீா் கிடைக்குமா என அச்சம் ஏற்பட்டது.

இந்நிலையில் கடந்த சில நாள்களாக கேரள மாநிலம், கோவில்கடவு, காந்தலூா், மறையூா் ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கடந்த 3 நாள்களாக அணைக்கு உள்வரத்து ஆயிரம் கனஅடியை கடந்து வந்து கொண்டிருந்தது. ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி அளவில் அதிகபட்சமாக 1,687 கனஅடி வந்தது. இதைத் தொடா்ந்து கடந்த 2 நாள்களில் மட்டும் அணையின் நீா்மட்டம் 10 அடி உயா்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதே நிலை நீடித்தால் அணையின் நீா்மட்டம் வேகமாக உயரும் நிலை ஏற்படும். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

அணை நிலவரம்:

90 அடி உயரமுள்ள அணையில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி 41.82 அடி நீா்மட்டம் இருந்தது. அணைக்கு உள் வரத்தாக 2,169 கனஅடி வந்து கொண்டிருந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.