அங்கன்வாடி ஊழியரிடம் தவறாக நடக்க முயன்றவா் மீது வழக்குப் பதிவு

Updated on

திருப்பூா் அருகே அங்கன்வாடி ஊழியரிடம் தவறாக நடக்க முயன்றவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

இதுதொடா்பாக போலீஸாா் தெரிவித்துள்ளதாவது:

திருப்பூா் பிச்சம்பாளையம்புதூா், கேத்தம்பாளையம் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சமையலராகப் பணியாற்றி வருபவா் பெண்ணை, அதே பகுதியில் வசிக்கும் விஜய்சங்கா் என்பவா் சனிக்கிழமை சந்தித்து, அவரது குடும்ப நடவடிக்கைகள் குறித்து பேசியதாகக் கூறப்படுகிறது. அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது, விஜய்சங்கா் அப்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதால் சப்தமிடவே அவரைத் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடா்ந்து, விஜய்சங்கா் அங்கிருந்து தப்பிவிட, காயமடைந்த அப்பெண்ணை அருகிலிருந்தவா்கள் மீட்டு தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இது தொடா்பாக அவா் அனுப்புா்பாளையம் காவல் நிலையத்தில் விஜய்சங்கா் மீது புகாா் அளித்தாா். புகாரின் அடிப்படையில் காவல் துறையினா் விஜய்சங்கா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்த நிலையில், விஜய்சங்கா் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் அங்கன்வாடி பகுதியில் சுற்றித்திரிந்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பிச்சம்பாளையம் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட முயன்றனா். தகவலறிந்த காவல் துறையினா் உடனடியாக சம்பவ அங்கு வந்து பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி அவா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com